Skip to main content

காஞ்சிபுரம் மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்!

Published on 09/07/2024 | Edited on 09/07/2024
Resolution of no confidence in Kanchipuram Mayor

கோவை மேயராக பதவி வகித்து வந்த கல்பனா ஆனந்த குமார் தனது பதவியை கடந்த 3 ஆம் தேதி (03.07.2024) ராஜினாமா செய்தார். மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் தனது ராஜினாமா கடிதத்தை தனது உதவியாளர் மூலம் வழங்கினார். மேயர் பதவியில் இருந்து கல்பனா ராஜினாமா செய்தது குறித்து மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவிக்கையில், “உடல் நிலை மற்றும் குடும்பச் சூழ்நிலை போன்ற தனிப்பட்ட காரணங்களுக்காக மேயர் பதவியில் இருந்து கல்பனா ஆனந்த குமார் ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பியுள்ளார்” எனத் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அன்றைய தினமே (ஜூலை 3) நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்தார். மாநகராட்சி ஆணையரிடம் தனது ராஜினாமா கடிதத்தை சரவணன், தனிப்பட்ட காரணங்களுக்காக மேயர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது. கோவை, நெல்லை என அடுத்தடுத்து ஒரே நாளில் இரு மேயர்கள் ராஜினாமா செய்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் மீது வரும் 29 ஆம் தேதி (29.07.2024) காலை 10 மணிக்கு நம்பிக்கையில்லா தீர்மான கூட்டம் நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் பெண் மேயர் என்ற சிறப்பை பெற்றவர் மகாலட்சுமி ஆவார். காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 கவுன்சிலர்கள் மொத்தம் உள்ளனர். இவர்களில் மேயருக்கு எதிராக 33 திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாகவே காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர் ஆணையர் கண்ணன் உள்ளிட்டோரிடம் மனு அளித்திருந்தனர். இந்த மனுவின் அடிப்படையில் மேயர் மகாலட்சுமி மீது 29 ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. 

சார்ந்த செய்திகள்