'இன்றைய இட ஒதுக்கீட்டு முறையில் வாய்ப்புகள் குறைவாகப் பெறுவது பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருக்கின்ற சமூகங்கள்தான்' என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இன்று தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படும் இட ஒதுக்கீட்டு முறையில், 20 சதவீதம் இருக்கின்ற மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு இருக்கிறது. 18 சதவீதம் இருக்கின்ற பட்டியலின மற்றும் மலைவாழ் மக்களுக்கு 19 சதவீத இட ஒதுக்கீடு இருக்கிறது. பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருக்கின்ற சமுதாயங்களைச் சார்ந்த 60 சதவீத மக்களுக்கு 26.5 சதவீத இட ஒதுக்கீடு தான் கொடுக்கப்பட்டிருக்கிறது.
கல்லூரி மேற்படிப்பு இட ஒதுக்கீடாக இருந்தாலும், அரசு வேலைவாய்ப்புகளாக இருந்தாலும் தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்படுவது பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சார்ந்த சமுதாய மக்கள்தான். ஆரம்ப காலங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு இருந்த வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக வெவ்வேறு காலகட்டங்களில் பறிக்கப்பட்டது.
இதைப்பற்றிய விழிப்புணர்வும் தங்களுக்குள் ஒற்றுமையும் இல்லாத காரணத்தினால் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சார்ந்த சமுதாய மக்களுடைய உரிமைகளுக்காக தமிழகத்தில் கோரிக்கைகள் வலுவாக வைக்கப்படவில்லை. பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருக்கின்ற சமுதாயங்கள் எல்லாம் ஒன்றுபட்டு தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடவில்லை என்றால், இன்னும் 10 ஆண்டுகள் கடந்தால் பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருக்கின்ற சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் யாரும் காவல்துறை அதிகாரிகளாகவோ அல்லது அரசு அலுவலர்களாகவோ இருக்க மாட்டார்கள்.
நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் அதிகமாகப் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருக்கின்ற காரணத்தினால், இந்தப் பிரிவைச் சார்ந்த இளைய சமுதாயம் நல்லதொரு எதிர்காலத்தைப் பெற முடியாமல் தவிக்கிறது. அரசு வேலைகளில் சரியான வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் தனியார் வேலைகளுக்காகவும், வெளிநாட்டு வேலைகளுக்காகவும் மிகவும் சிரமப்படுகிறார்கள். சமூக நீதி என்பது அனைத்துப் பிரிவினருக்கும் வாய்ப்புகள் சமமாகக் கிடைப்பதாக இருக்க வேண்டும். தமிழக அரசு உண்மை நிலையைப் புரிந்துகொண்டு பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்'' இவ்வாறு கூறியுள்ளார்.