பல வருடங்களாகவே 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' என்ற கூற்றை மத்திய பாஜக அரசு வெளிப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து இந்த குழு ஆய்வு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் முன்னாள் தேர்தல் அதிகாரிகள் இடம் பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 18ல் இருந்து 22 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 'ஒரே நாடு ஒரு தேர்தல்' என்பதற்கான சட்டத் திருத்தங்களை இந்த சிறப்புக் கூட்டத்தில் கொண்டு வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (டுவிட்டர்) தளத்தில், “ஒரே நாடு ஒரே தேர்தல் கொள்கைக்கு அதிமுக அதரவு தெரிவிக்கிறது. நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என அதிமுக வலியுறுத்துகிறது. இது நாட்டின் வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்கும் மற்றும் அரசியல் ஸ்திரமின்மையை தவிர்க்கும். ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டால் நேரத்தையும், பெரும் செலவையும் மிச்சப்படுத்தும்'கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்திற்கு தமிழக முதல்வர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து மு.க.ஸ்டாலின் திருமண விழா ஒன்றில் பேசுகையில், 'நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை ஒன்றிய பாஜக அரசு ஏற்பாடு செய்துள்ளது அதில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த முயன்று வருகிறது. இதற்காக முன்னாள் ஜனாதிபதி தலைமையில் குழு ஒன்றை பாஜக அரசு அமைத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி என்பவர் அனைவருக்கும் பொதுவானவர். அவரை வைத்து பாஜக அரசு குழு அமைத்துள்ளது. தலையாட்டி பொம்மைகளாக இருப்பவர்களை குழுவில் போட்டு சதி திட்டம் தீட்டி வருகிறது பாஜக. எதிர்க்கட்சியாக இருந்த போது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் இதற்கு அதிமுக ஆதரவு தருகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நிறைவேறிவிட்டால் எந்தக் கட்சியும் இருக்காது. தேர்தல் செலவை குறைப்பதற்கு முன்பு பாஜக அரசு கொள்ளையடிப்பதை குறைக்க வேண்டும். பல துறைகளில் நடந்த ஊழல் குறித்து பிரதமர் பதில் எதுவும் சொல்லவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தினால் திட்டத்தின் மூலம் அதிபராக பிரதமர் மோடி முயற்சிக்கிறார். இந்தியாவை காப்பாற்ற நாம் இன்றைக்கு தயாராக இருக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.