Skip to main content

அதிமுக ஆட்சியில் மின்வெட்டு இல்லாததற்கு இதுதான் காரணம் - எடப்பாடி பழனிசாமி பேட்டி

Published on 22/04/2022 | Edited on 22/04/2022

 

edappadi palanisamy

 

தமிழகத்தில் கடந்த இரு நாட்களாக ஏற்பட்டுள்ள மின்வெட்டு குறித்து சட்டசபையில் எதிர்க்கட்சியான அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது.

 

பின்னர் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 17,100 மெகாவாட் மின்தேவை இருக்கும்போது 13000 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்திசெய்யப்படுகிறது. கோடை காலத்தில் மின் தேவை அதிகரிக்கும்போது நிலக்கரி கையிருப்பை அரசு வைத்திருக்க வேண்டும். ஆனால், இந்த அரசு தவறிவிட்டது" எனக் குற்றம் சாட்டினார். இந்த மின்வெட்டு காரணமாக சிறு,குறு தொழில் செய்பவர்கள், விவசாயிகள், மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

 

பின்னர், இது குறித்து விளக்கமளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "மின்பற்றாக்குறையை சமாளிக்க தனியாரிடமிருந்து 3000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதாகவும், இந்த ஆட்சியில்தான் இது மாதிரியான நிலைமை ஏற்படுவது மாதிரியான தோற்றத்தை உருவாக்கி பேசுவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், மத்திய அரசு குறைந்த அளவே நிலக்கரி ஒதுக்குவதால் அடுத்த இரு மாதங்களுக்கு நிலக்கரியை இறக்குமதி செய்ய முதல்வர் உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

 

அமைச்சரின் இந்த விளக்கத்தை ஏற்காத அதிமுகவினர், சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "கோடை காலத்தில் மின்தேவை அதிகரிக்கும் என்பதால் மின் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும். அதற்கு ஏற்றவாறு வெளிமாநிலம், மத்திய தொகுப்பு, வெளிநாடுகளில் இருந்து நிலக்கரியை கொள்முதல் செய்து அதைக் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். அதை அம்மாவின் அரசு சரியாக செய்ததால்தான் அதிமுக ஆட்சியில் மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் இருந்தது. ஆனால், இந்த அரசு அதை செய்யத் தவறிவிட்டது" எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்