திமுக தலைவர் ஸ்டாலின் பற்ற வைத்துள்ள நெருப்பு இந்தியா முழுவதும் பற்றி எரியும் என திமுக எம்.பி. ஆ.ராசா கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் முதன்மைக் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்காக கூட்டணிக் கட்சிகளான திமுக, விசிக போன்றவை களத்தில் இறங்கி தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றன. அதேபோல், அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு ஆதரவாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டணிக் கட்சிகளான தமாகா, பாஜகவும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து ஈரோடு கிழக்கில் திமுக எம்.பி. ஆ.ராசா வாக்கு சேகரித்தார். பிரச்சாரத்தின் போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அரசியல் சட்டத்தை முற்றிலுமாக சிதைக்கின்ற வேலையை மோடி அரசு செய்து கொண்டு உள்ளது. அதை எதிர்ப்பதற்கான வலுவான குரல் தமிழகத்தைத் தவிர வேறு இல்லை என நினைத்தோம். குறைந்தபட்சம் சிவசேனாவின் தாக்கரே அணியினர் இப்பொழுது விழித்துள்ளார்கள். நாங்கள் பற்ற வைத்த நெருப்பு; திமுக தலைவர், தமிழக முதலமைச்சர் பற்ற வைத்துள்ள நெருப்பு; இந்த பாசிச அரசுக்கான எதிர்ப்புக் குரல் விரைவில் இந்தியா முழுவதும் பற்றி எரியும். அதற்கான தீர்வை 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயமாக நீங்கள் பார்க்கலாம்” எனக் கூறினார்.