முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பற்றி விமர்சித்ததாக, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசாவுக்கு எதிராக திருப்பூர் மாவட்டம் அவினாசியில் இன்று (09-02-24) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “மக்களுக்காக வாழ்ந்த எம்.ஜி.ஆரை பற்றி பேசுவதற்கு ஆ. ராசாவுக்கு என்ன தகுதி இருக்கிறது. அதிமுக கட்சி வளர்ச்சி பொறுக்காமல் இப்படி பேசுகிறார்.
நாட்டிற்காக உழைத்த தலைவர்களை அவதூறாகப் பேசுவதை கைவிட வேண்டும். இல்லையென்றால் ஆ. ராசா மக்களால் அடக்கப்படுவார். நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் ஆ.ராசா போட்டியிடுகிறார். அவரை மக்கள் டெபாசிட் இழக்க செய்ய வேண்டும். எம்.ஜி.ஆரை பற்றி விமர்சனம் செய்தால் இதுதான் தண்டனை என்பதை அவர் உணர வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், ஆ.ராசா கோவையில் இன்று (09-02-24) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று சொல்வதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு யோக்கிதை இல்லை. எடப்பாடி பழனிசாமி சேர்ந்த முன்னாள் அமைச்சர், முதலமைச்சர் பற்றியும், கலைஞர் பற்றி என்னவெல்லாம் பேசினார்கள் என்று எல்லாருக்கும் தெரியும்.
அது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் இன்னும் இருக்கிறது. அதன் பிறகு, அதிமுக சார்பில் மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் கலை நிகழ்ச்சி என்கிற பெயரில் முதல்வர் குடும்பத்தை கேவலப்படுத்தினார்கள். இதற்கெல்லாம் அவர் வருத்தம் தெரிவித்து, தனது பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தால் நானும் வருத்தம் தெரிவித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று கூறினார்.