Skip to main content

காங்கிரஸ் அழைப்பைப் புறக்கணித்த ரங்கசாமி..! 

Published on 22/01/2021 | Edited on 22/01/2021

 

Rengasamy ignores Congress call ..!


புதுவை சட்டமன்றத்துக்கும் இந்தாண்டு தேர்தல் நடக்கவிருக்கிறது. புதுவையில் முதல்வர் நாராயணசாமியின் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

 

தமிழகம் மற்றும் புதுவையில் திமுக, காங்கிரஸ் கூட்டணி நீடித்து வரும் நிலையில், புதுவையில் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்றும் அதற்கேற்ப தி.மு.க. தனித்தோ அல்லது தி.மு.க. தலைமையில் கூட்டணியோ உருவாக்கப்பட வேண்டும் என்றும் புதுவை தி.மு.க.வினர், தங்கள் கட்சித் தலைமையை சமீபகாலமாக வலியுறுத்தி வந்தனர். இதனால், புதுவையில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி நீடிக்காதோ என்கிற அரசியல் பரபரப்பு உருவானது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கூட்டணி தொடரும் என்கிற ரீதியில் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

 

இதனையடுத்து, புதுவை தி.மு.க.வினரின் போர்க்குரல் தற்போது ஓய்ந்திருக்கிறது. இந்த நிலையில், புதுவை காங்கிரசின் மூத்த தலைவர்கள், தங்களுடைய டெல்லி தலைமைக்கு சில தகவல்களைத் தொடர்ச்சியாக அனுப்பி வைத்தபடி இருக்கிறார்கள். குறிப்பாக, நாராயணசாமியையே மீண்டும் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலைச் சந்தித்தால் காங்கிரஸ் தோற்றுப் போகும் என்று கட்சித் தலைமைக்கு தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.

இதனை ஆராய்ந்த ராகுல்காந்தி, திமுக - காங்கிரஸ் கூட்டணியில் சில புகைச்சல்கள் ஏற்கனவே புதுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் நாராயணசாமி மீது நம்பிக்கை இழந்திருப்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர்களிடம் சொல்லியிருக்கிறார். இந்த நிலையில், டெல்லிக்கு அழைக்கப்பட்டார் நாராயணசாமி. அதன்படி டெல்லி சென்ற அவர், ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்தார். அதில், பல்வேறு அரசியல் நிலவரம் குறித்து அவரிடம் விவாதித்துள்ளார் ராகுல்காந்தி.

 

இந்த நிலையில், காங்கிரசிலிருந்து பிரிந்துசென்று தனிக்கட்சி நடத்தி வரும் முன்னாள் முதல்வர் ரங்கசாமியை, காங்கிரஸ் தலைமையிலிருந்து தொடர்பு கொண்டு, “நீங்கள் மீண்டும் காங்கிரஸுக்கு வர வேண்டும் என ராகுல் விரும்புகிறார். அதனால் காங்கிரசுக்கு வாருங்கள், நீங்கள்தான் முதல்வர் வேட்பாளர்” என்று அழைத்துள்ளனர். ஆனால், ரங்கசாமியோ, எடுத்த எடுப்பிலேயே காங்கிரசின் அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார். பாஜக கூட்டணியில் இணைவதற்கான முயற்சியில் அவர் இருப்பதாலேயே காங்கிரசின் அழைப்பைப் புறக்கணித்திருக்கிறார் என்கின்றனர் புதுவை காங்கிரஸார்.

 

 

சார்ந்த செய்திகள்