Skip to main content

துணிச்சல் மங்கையர் மூவருக்கும் வாழ்த்துகள்! ராமதாஸ் அறிக்கை

Published on 15/08/2020 | Edited on 16/08/2020
Perambalur

 

வீர தீர செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருது பெற்ற துணிச்சல் மங்கையர் மூவருக்கும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர நாளில் வழங்கப்படும்  கல்பனா சாவ்லா  விருது இந்த  ஆண்டு அதைப் பார்த்த ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி, முத்தம்மாள், ஆனந்தவள்ளி ஆகிய 3 பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அந்த விருது வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியவன் என்ற வகையில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இதற்காக தமிழக அரசுக்கு எனது  நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

அவர்கள் செய்த துணிச்சலான செயல் மிகவும் பாராட்டத்தக்கது. அது என்ன தெரியுமா?

 

பெரம்பலூர் மாவட்டம் கொட்டரை பகுதியில் மருதையாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்காக அப்பகுதியில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் அதிக ஆழத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளது.  அப்பகுதி மக்கள் அந்த பள்ளத்தில் தேங்கியுள்ள தண்ணீரில் தான் குளிப்பது வழக்கம்.

 

ramadoss - pmk -

 

மருதையாற்றுக்கு அருகில் உள்ள திடலில் மட்டைப்பந்து போட்டிகள் நடைபெற்று வருவதால், அதில் பங்கேற்பதற்காகவும், போட்டிகளைக் காண்பதற்காகவும் வந்த இளைஞர்கள் சிலர் அந்த பள்ளத்தில் குளிக்கச் சென்றுள்ளனர். அதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அது ஆபத்தான பகுதி என்பதால் அதில் குளிக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர். ஆனால், அதை பொருட்படுத்தாமல் 4 இளைஞர்கள் அந்த நீரில் குளித்துள்ளனர். நீச்சல் தெரியாத அவர்கள் ஆழத்தில் சிக்கி உயிருக்கு போராடியுள்ளனர்.

 

அதைப் பார்த்த ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி, முத்தம்மாள், ஆனந்தவள்ளி ஆகிய 3 பெண்கள் தங்களின் சேலையை கயிறாக மாற்றி அந்த இளைஞர்கள் நோக்கி வீசியுள்ளனர். அவர்களில் இருவர் நீரில் மூழ்கி இறந்து விட்ட நிலையில்,   கார்த்திக், செந்தில் வேலன் ஆகிய இரு இளைஞர்களை அவர்கள் பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர்.

 

நீரில் மூழ்கியவர்களில் இருவரை தங்களின் உயிரையும், மானத்தையும் பொருட்படுத்தாமல் போராடி காப்பாற்றிய செந்தமிழ்ச்செல்வி, முத்தம்மாள், ஆனந்தவள்ளி ஆகிய மூவருக்கும் வீரதீர செயல்களுக்கான விருதும், வெகுமதியும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று ஆகஸ்ட் 7-ஆம் தேதியிட்ட முகநூல் பதிவில் வலியுறுத்தியிருந்தேன். அதையேற்று இப்போது அவர்களுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப் பட்டிருக்கிறது.'' இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்