சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பா.ஜ.கவின் தேசிய நிர்வாகிகள் பட்டியலில், தடாலடி பிரமுகரான ஹெச்.ராஜா பெயர் இடம்பெறவில்லை. இதனால் சமீப காலமாக வழக்கமாகப் பேசும் சர்ச்சைக்குரிய கருத்துகள் எதையும் அவர் பேசுவதில்லை. இதற்குக் காரணம் என்ன? என விசாரித்தபோது, அவர் மத்திய அமைச்சராக முயற்சி செய்துகொண்டிருக்கிறார். அதனால்தான் மௌனமாக இருக்கிறார் என்கிறார்கள் பா.ஜ.கவினர்.
ஆனால், அவரை அமைச்சராக்கக் கூடாது எனத் தமிழக பா.ஜ.கவில் இருந்து எதிர்ப்பு குரல்கள் டெல்லிக்குச் சென்றிருக்கிறது என்கிறது பா.ஜ.க வட்டாரங்கள்.
தேசியச் செயலாளர் பதவியை பா.ஜ.க தலைமை பறித்துக் கொண்டதால் மனசங்கடத்தில் இருந்த ராஜா, இதுகுறித்து பெரிதாக ரியாக்ஷன் காட்டவில்லை. அதே நேரத்தில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் விரைவில் தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் 8 ராஜ்யசபா உறுப்பினர்களில் ஒருவராகத் தன்னையும் தன் சீனியாரிட்டி கருதி 'செலக்ட்' செய்ய வேண்டும் என்று டெல்லி தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
எப்படியாவது மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்துவிடவேண்டும் என்பதுதான் அவரது ஆசையாம். ஆனால், உத்திரப்பிரதேச முதல்வரான யோகி ஆதித்யாவோ, சர்ச்சைக்குரிய ஒருவரை எங்கள் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு அனுப்பமாட்டோம் என ஹெச்.ராஜாவுக்கு செக் வைத்திருக்கிறாராம்.