Rajendra Balaji says When Deve Gowda becomes PM, can't EPS become it?

அதிமுகவின் 52ஆம் ஆண்டு விழா தமிழ்நாடு முழுக்க அக்கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. அது தொடர்பாக நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என எதுவாக இருக்கட்டும் எடப்பாடியின் கரத்தை வலுப்படுத்துங்கள். இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து எடப்பாடி சொல்லுகின்ற பிரதமர்., ஏன் சூழ்நிலை வந்தால் எடப்பாடியாரே பிரதமராக வரக்கூடிய அளவுக்கு 40 தொகுதிகளிலும் அற்புதமான தீர்ப்பை தமிழ்நாட்டு மக்கள் வழங்கினால், எடப்பாடியின் கரம் ஓங்கினால் டெல்லியில் எடப்பாடி சொல்லக்கூடியது நடக்கும்” என ஆக்ரோஷம் பொங்க பேசினார்.

Advertisment

இதையடுத்து, நேற்று முன் தினம் (25-10-23) கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க. தமிழ்நாடு தலைவர் அண்ணாமலையிடம் இது தொடர்பாகச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், “சிரிப்பு தான் எனது பதில். பிரதமர் பதவிக்கு என மரியாதை உள்ளது. மூன்றாவது முறையாக மோடி தான் பிரதமர் வேட்பாளர். எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் கனவு இருக்கலாம்” என்று கூறினார்.

Advertisment

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் ,சிவகாசி பகுதியில் அதிமுகவின் 52ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நேற்று முன் தினம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “எடப்பாடி பழனிசாமி பிரதமர் ஆவார் என்று நான் சொன்னதற்கு சில பேர் கேலி செய்து சிரிக்கின்றனர். ஏன் எடப்பாடி பழனிசாமியால் பிரதமர் ஆகமுடியாதா?. கேலி செய்பவர்களுக்கு நான் ஒன்றை ஞாபகப்படுத்திக் கொள்கிறேன். ஒரே ஒரு எம்.பி. மட்டும் வைத்திருந்த ஐ.கே. குஜ்ரால் பிரதமராக இருந்தார். அதே போல், ஒரு சில எம்.பி.க்களை வைத்திருந்த தேவுகவுடா மற்றும் சந்திரசேகர் பிரதமராக இருந்தனர். அப்படி இருக்கும் போது இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏன் பிரதமர் ஆகக்கூடாது?. ஒன்று எடப்பாடி பழனிசாமி கை காட்டும் ஒருவர் பிரதமர் ஆகலாம், அல்லது அவரே பிரதமர் ஆகலாம்” என்று கூறினார்.