2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் டிசம்பர் 11 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் வெற்றி தோல்வியை இரண்டு மாநில விவசாயிகள் தீர்மானிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. அதற்கு அவர்கள் உற்பத்தி செய்யும் பூண்டு முக்கிய காரணமாக இருக்கப் போகிறது!
இந்தியாவில் 45 சதவீதமான பூண்டு உற்பத்தி என்பது மத்திய பிரதேச மாநிலம் மால்வா, ராஜேஸ்தான் மாநிலம் ஹடோடி ஆகிய பகுதிகளில் முக்கிய பணப்பயிராக இருந்து வருகிறது. 2016 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஒரு கிலோ பூண்டு ரூபாய் 100 அளவிற்கு விற்பனை ஆகி இருக்கிறது. அதே பகுதியில் நல்ல தரமான பூண்டு ரூபாய் 130 அளவிற்கும், ஒரு குவிண்டால் 13ஆயிரம் ரூபாய் அளவிற்கு விற்பனைக்கு எடுத்து கொல்லபட்டு இருக்கிறது.
2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் மொத்தமாக இந்த நிலைமாறி இருக்கிறது. 2017 மார்ச் மாதம் அறுவடை முடிந்து சந்தைக்கு வரவே விவசாயிகள் நினைத்ததற்கு நேர்மாறாக கடுமையாக விலை சரிந்துள்ளது. 2016 காலகட்டதில் கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் 2017 மார்ச் மாதம் 40 ரூபாய் அளவிற்கு குறைந்துள்ளது. அதன் பின்னர் கடந்த ஜூன் மாதம் கிலோ 30 ரூபாய்க்கு குறைந்தது. அதன் பின்னர் படிப்படியாக குறைந்து கிலோ 1 ரூபாய்க்கு வீழ்ச்சி அடைந்து இருக்கிறது. இது விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்த மோசமான நிலையின் காரணமாக 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். ஆனால் வெளியில் தெரியாமல் இருக்க விவசாயிகள் மிரட்டப்படுகிறார்கள். இந்த ஆண்டு அதிக அளவில் விவசாயிகள் இறந்திருக்கிறார்கள். இந்த விவகாரம் நிச்சயம் தேர்தலில் எதிரொலிக்கும் என்கிறார்கள். அதே போல இந்த பிரச்சனையை கையில் எடுத்து இருக்கும் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றால் இதற்கான தீர்வை கொண்டு வருவோம் என்று வாக்குறுதியை அளித்து வருகிறார்கள்.