
சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று முன்தினம் (25.02.2025) 19வது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மார்ச் 5ஆம் தேதி அனைத்துக் கட்சிக்கூட்டத்தை கூட்ட முடிவெடுக்கப்பட்டது. அதில் 2026ஆம் ஆண்டு மக்கள்தொகையின் அடிப்படையில், நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளை மத்திய அரசு மறுசீரமைப்பு செய்ய வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்தில் 8 மக்களவைத் தொகுதிகளை இழக்க வேண்டிய சூழல் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இத்தகைய சூழலில் தான் கோவையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று (26.02.2025) திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “உண்மையான பிரச்சினைகளிலிருந்து விலகிச் செல்ல முதல்வர் மு.க. ஸ்டாலினும் அவரது மகனும் பல பிரச்சினைகளை எழுப்புகிறார்கள். இன்று, அவர்கள் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி மறுவரையறை செய்வது தொடர்பாக விவாதிப்பதற்காக அணைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த உள்ளனர். தொகுதி மறுவரையறைக்குப் பிறகும், தென் மாநிலங்களில் எந்த இடங்களும் குறைக்கப்படாது என்று பிரதமர் மோடி ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தார்” எனப் பேசியிருந்தார்.
இந்நிலையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி நாடாளுமன்ற மக்களவை தொகுதியின் உறுப்பினருமான ஆ.ராசா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தொகுதி மறு சீரமைப்பு என்பது தொகுதி விகிதாச்சாரமா?. அல்லது மக்கள் தொகை விகிதாச்சாரமா? என்பது குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்தவில்லை. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பு என்றால், மக்கள் தொகையை குறைத்ததால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும். இதனால் தமிழ்நாட்டில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும். ஆனால், வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை உயரும். இது அநீதி ஆகும். மத்திய அரசின் அறிவுரையை கேட்டு தமிழ்நாட்டில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தி இருக்கிறோம். பல துறைகளில் தமிழ்நாடு முன்னேறி இருக்கிறது. இப்போது சட்டப்படி எங்களை தண்டிப்பது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல” எனப் பேசினார்.