காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சிதம்பரம் காந்தி சிலை அருகே ஞாயிற்றுக்கிழமை காலை அறவழிப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: எங்கள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக அராஜகத்தை மோடி அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டுள்ளது. அவர்களை கேள்விக் கணைகளால் ராகுல் காந்தி துளைத்தெடுத்து வருகிறார். பதில் சொல்ல முடியாத காரணத்தினால் அவர்கள் இதுபோன்ற சட்டத்திற்கு புறம்பான விஷயங்களில் இறங்குகிறார்கள். இந்த நாடு ஜனநாயக நாடு பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை உள்ள நாடு. எந்த தவறான விஷயங்களையும் அவர் சொல்லவில்லை. உண்மைக்கு புறம்பான விஷயத்தை அவர் செல்லவில்லை. கர்நாடகத்தில் எப்போது பேசினார் என்று குஜராத்தில் வழக்கு தொடுக்கிறார்கள். வழக்கு தொடுத்தவரே வழக்கை நிறுத்தி வைக்கிறார். அதன் பிறகு நீதிபதி மாற்றப்படுகிறார். வேறு நீதிபதி வந்த பிறகு தீர்ப்பு வழங்கப்படுகிறது. இதுதான் நடந்துள்ளது.
பிரச்சனை என்ன. நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசக்கூடாது என்பதுதான் பிரச்சனை. பொதுவெளியில் அவர் எவ்வளவு பேசினாலும், மோடி பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நாடாளுமன்றத்தில் பேசும்போது பதில் சொல்ல வேண்டிய அவசியம் மோடிக்கு உள்ளது. அந்த அவசியத்தை செய்தால் பிரச்சனை வரும் என்பதாலும், உண்மை வெளிப்படும் என்பதால் பேசத் தயங்குகிறார்கள். நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது எதிர்க்கட்சிகள் பேச வேண்டும். ஆளும் கட்சி பதில் அளிக்க வேண்டும். எதிர்க்கட்சியே பேச அனுமதி மறுப்பது என்பது என்ன பொருள். மோடி வெளி நாடு செல்லும் போதெல்லாம், ஒவ்வொரு முறையும் அதானி உங்களுடன் வருகிறாரே? இயல்பா வருகிறாரா? வேறு என்ன காரணம் என்று கேள்வி கேட்டார். இரண்டாவது கேள்வியாக நீங்க போய் வந்த பின்னர் அதானி அங்கு போகிறாரே? மூன்றாவது கேள்வி ஒரு நாட்டிற்கு போய் வந்தவுடனேயே அந்த நாட்டில் அதானிக்கு வியாபாரம் ஒப்பந்தம் கிடைக்கிறதே. அவருக்கு மட்டும் கிடைப்பது எவ்வாறு என கேள்விகளை ராகுல் எழுப்பினார். நடைமுறைக்கு இல்லாத நிறுவனத்திற்கு 20 ஆயிரம் கோடி பணம் வந்துள்ளது. அந்த பணம் யாருடைய பணம். எப்படி வந்தது என ராகுல் கேள்வி கேட்டார். இதற்கு பதில் சொல்வது அவசியம்.
அதற்காக நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியை நுழைய விடமாட்டோம் என்பது எந்த விதத்தில் நியாயம். இது ஜனநாயகமா? ஹிட்லர் இதுதான் செய்தார். இன்று மோடியும் அதை செய்கிறார். பாஜக தனது புதை குழியை தோண்டிக் கொள்வதில் மிக ஆர்வமாக உள்ளது. மோடியும், காங்கிரஸ் கட்சி அவருக்கு புதை குழி தோண்டுகிறது என அதை ஒப்புக் கொண்டுள்ளார். ராகுல் காந்தி சிறு குழந்தை அல்ல. விளையாட்டு பிள்ளை அல்ல. வாழ்க்கையில் பலவற்றை துறந்து அரசியலுக்கு வந்துள்ளார். எதையும் எதிர்கொள்ள அவர் தயாராக உள்ளார். மகாத்மா காந்தி பிரதமராக, குடியரசு தலைவராக இருந்தாரா? அமைச்சராக இருந்தரா? ஆனால் அவர் சொன்னதை தான் இந்தியா பின்பற்றியது. அந்த இடத்தில் தற்போது ராகுல் காந்தி உள்ளார். அவருக்கு பதவி முக்கியம் இல்லை. எம்பி பதவி மக்களால் கொடுக்கப்பட்டது. தனி மனிதர்கள் அதனை பிடுங்குகிறார்கள். அதனை எதிர்கொள்ள தயார். மக்கள் மன்றத்தை சந்திக்க தயார். நீதிமன்றத்தை சந்திக்க தயார். அவருடைய இந்திய ஒற்றுமை பயணம் கட்சியினரால் தொடங்கப்பட்டு, பொதுமக்களால் நடத்தப்பட்டது. இதை பார்த்து பாஜக அச்சப்படுகிறது. அதன் விளைவுதான் இவர்கள் கடுமையாக நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.
மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் எங்களுடன் இல்லை. ஆனால் அதனை தவறு என கூறியுள்ளார்கள். பிரசாந்த் கிஷோர் இது அதிகபட்ச தண்டனை எனக் கூறியுள்ளார். இதனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வன்மையாக கண்டிக்கிறது. முதல் கட்டமாக அறப் போராட்டத்தில் இறங்கியுள்ளோம். இந்தியா முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வழி நடத்துகிறது. அதன் பிறகு சாலை மறியல், ரயில் மறியல், ஒவ்வொரு வட்டாரங்களிலும் தெரு முனை பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம். நாங்கள் இதனை மக்கள் இயக்கமாக மாற்றி, காங்கிரஸ் தொண்டர்கள் மக்களிடையே சென்று கொண்டு சேர்ப்போம்” என்று பேசினார்.