தேசிய அளவிலான எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவை ஏற்படுத்தும் முயற்சியில் முக்கிய பங்காற்றிய பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தற்போது பீகாரில் பா.ஜ.க. ஆதரவுடன் ஆட்சி அமைத்திருப்பதும், இந்தியா கூட்டணியில் இருந்து விலகி என்.டி.ஏ. கூட்டணியில் ஐக்கியமாகி இருப்பதும் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இ.ந்.தி.யா. கூட்டணியை ஒருங்கிணைத்து பா.ஜ.க.வுக்கு எதிராக பெரும் முன்னெடுப்பை எடுத்த நிதிஷ் குமார், பா.ஜ.க. ஆதரவுடன் நேற்று பீகார் முதல்வராக பதவி ஏற்றுள்ள நிலையில், இன்று காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி பீகாருக்கு செல்கிறார். இது மேலும், தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகிய இருவரின் கடும் முயற்சியில் 2023 ஜூன் மாதம் பீகார் மாநில தலைநகரமான பாட்னாவில் இந்தியா முழுவதிலும் இருந்து 26 எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட மாநாடு நடைபெற்றது. தேசிய அளவில் மிகப்பெரும் கவனம் ஈர்த்த அந்த மாநாட்டில் பாஜகவை ஒன்றிய ஆட்சியில் இருந்து அகற்றுவதே எங்கள் ஒற்றை நோக்கம் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் சூளுரைத்தார்கள். அதற்கு அடுத்த மாதமே எதிர்க்கட்சி தலைவர்களின் அடுத்த மாநாடு கர்நாடக மாநிலம் பெங்களூரில் நடைபெற்றது. பெங்களூர் மாநாட்டில்தான் எதிர்க்கட்சிகளின் அந்த கூட்டணிக்கு இந்தியா கூட்டணி என்று பெயர் வைக்கப்பட்டது. அப்படி உருவான இந்தியா கூட்டணியை பாஜக அரசு கடுமையாக விமர்சித்தும் வந்தது.
இந்நிலையில், பீகாரில் ஏற்பட்ட பரபரப்பான அரசியல் சூழலில் பீகார் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை நேற்று (28.01.2024) காலை 10.30 மணியளவில் முதல்வர் நிதிஷ்குமார் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது ஆளுநரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார் நிதிஷ் குமார். இதனையடுத்து நிதிஷ்குமாரின் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாக அறிவித்திருந்தார். ஆளுநரின் இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிதிஷ்குமார், “இன்று நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். மேலும் மாநிலத்தில் ஆட்சியை கலைக்குமாறு ஆளுநரிடம் கூறியுள்ளேன். பலரிடமும் ஆலோசனை கேட்ட பிறகே இந்த முடிவை எடுத்துள்ளேன். அரசியல் சூழ்நிலை காரணமாக மகா கூட்டணி முறிந்துவிட்டது. மகா கூட்டணியில் ஏற்பட்ட குழப்பங்களை சரிசெய்ய முயற்சித்தும் முடியவில்லை. எனவே மகா கூட்டணியில் இருந்து விலகி விட்டேன். அதே சமயம் புதிய கூட்டணியை அமைப்பேன்” எனத் தெரிவித்திருந்தார்.
முன்னதாக நேற்று காலையில் நடைபெற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவெடுக்க நிதிஷ் குமாருக்கு அதிகாரம் வழங்கி அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் அறிவித்திருந்தனர். அதே சமயம் பாஜக எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிதிஷ்குமாருக்கு நிபந்தனையுடன் ஆதரவு தருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த 2 மணி நேரத்தில் பாஜக ஆதரவுடன், பாஜக ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கி மீண்டும் ஆட்சியமைக்க நிதிஷ்குமார் உரிமை கோரி இருந்தார். அந்த கடிதத்தில் தனக்கு 128 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகவும் நிதிஷ்குமார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் காலையில் ராஜினாமா செய்த நிதிஷ்குமார், மாலை பாஜக ஆதரவுடன் மீண்டும் பீகார் முதல்வராக பொறுப்பேற்றார். அவருடன் எட்டு பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
கடந்த 23 ஆண்டுகளில் ஒன்பதாவது முறையாக நிதிஷ்குமார் முதல்வராக பதவியேற்றுள்ளார். பாஜக கூட்டணிக்கு நான்காவது முறையாக மாறி முதலமைச்சராக பதவியேற்கிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது. தற்பொழுது நடைபெற்று வரும் பதவியேற்பு விழாவில் பீகார் ஆளுநர் ராஜேந்திர ஹர்லேகர் நிதிஷ்குமாருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். காலையில் ராஜினாமா, மாலையில் பதவியேற்பு என அரசியல் பரபரப்பில் சிக்கியுள்ளது பீகார்.
இப்படியான பரபரப்பு சூழலில் பீகார் மாநிலத்திற்கு இன்று செல்கிறார் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி, 'இந்திய ஒற்றுமைப் பயணம்' என்ற நடைபயணத்தை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி ஸ்ரீநகர் வரை 3,750 கிலோமீட்டர் கடந்து முடித்தார். இதனைத் தொடர்ந்து, இந்திய ஒற்றுமைப் பயணத்தில் இரண்டாம் கட்டமான பயணத்திற்கு ‘பாரத் நீதி யாத்திரை’ என பெயரிடப்பட்டு, கடந்த 14ம் தேதி மணிப்பூரில் இருந்து துவங்கினார் ராகுல் காந்தி. இந்த நடைப்பயணம், மார்ச் 20 வரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. மணிப்பூரில் துவங்கிய இந்தப் பயணம் மும்பையில் முடிகிறது.
இந்தப் பயணத்தில் ஒரு கட்டமாக இன்று (29ம் தேதி) பீகார் மாநிலத்திற்கு செல்கிறார் ராகுல் காந்தி. இந்தியா கூட்டணியை ஒருங்கிணைக்கும் பணியில் முக்கிய பங்காற்றிய பீகார் முதல்வர் நிதிஷ் குமார், நேற்று இ.ந்.தி.யா கூட்டணியில் இருந்து விலகி என்.டி.ஏ. கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், இன்று ராகுல் காந்தி பீகாருக்கு செல்வது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்திற்கு செல்லும் ராகுல் காந்தி, கிஷன்கஞ்ச் எனும் மாவட்டத்தில் நடக்கவிருக்கும் பொதுக்கூட்டத்தில் பேச இருக்கிறார். இந்தப் பொதுக்கூட்டத்தில் நிதிஷ் விலகல் பற்றியும், இ.ந்.தி.யா. கூட்டணி பற்றியும் ராகுல் காந்தி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.