காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை நடை பயணம், இன்று வெள்ளிக்கிழமை, உத்தரப்பிரதேசத்திலிருந்து ஹரியானாவை எட்டியது. ஹரியானாவில் நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் பேசிய ராகுல் காந்தி, ராணுவ வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் அக்னிபாத் திட்டம், ஜி.எஸ்.டி. உள்ளிட்டவற்றைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
ராகுல் காந்தியின் நடை பயணத்துக்கான ஆதரவு நாளுக்கு நாள் பெருகிவரும் சூழலில், தற்போது அவரது பேச்சின் மீதான கவனம் இந்தியா முழுக்க அதிகரித்துள்ளது. ஹரியானாவில் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “ராணுவ வீரர்களின் ஓய்வூதியத்தை பறிப்பதற்காகவே அக்னி பாத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். இதுநாள்வரை இளைஞர்கள் ராணுவத்தில் 15 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வூதியம் பெற்றுவந்தனர். ஆனால் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கொண்டுவந்த அக்னி பாத் திட்டத்தின் மூலம், ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதியம் தூக்கியெறியப்பட்டுள்ளது. 6 மாதம் பயிற்சி, 4 ஆண்டு காலம் மட்டுமே ராணுவத்தில் பணி என்பதன்மூலம், ராணுவ வீரர்களின் ராணுவத்துக்காக சேவை செய்யும் கனவு பறிக்கப்பட்டதோடு, அவர்களுக்குரிய ஓய்வூதிய பலன்களும் நீக்கப்பட்டு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது. இதுதான் மோடி சொல்லும் புதிய இந்தியா” என்று கடுமையாக மோடி அரசை விமர்சித்தார்.
மேலும், “இந்த அக்னி பாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிக்கு வந்த இளைஞர்களை, போராட்டத்தில் கலந்துகொண்டவர்களின் புகைப்படங்கள் வெளியானால் அவர்களுக்கு அரசாங்கத்தில் வேலை தரப்படமாட்டாது என்று மோடி மிரட்டினார். இப்படியாக, இளைஞர்களை மட்டுமல்லாது, விவசாயிகள், தொழிலாளர்களைப் பயமுறுத்துவது தான் பா.ஜ.க.வின் கொள்கை.
21ஆம் நூற்றாண்டில், ஹரியானா வேலையில்லாத் திண்டாட்டத்தில் முதலிடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தை ஆளும் பா.ஜ.க., இம்மாநிலத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டது. இந்தியாவில் இரண்டுவிதமான இந்தியாக்கள் உள்ளன. ஒரு இந்தியாவில், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு கடைக்காரர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்கள் நிறைந்திருக்கிறார்கள். இன்னொரு இந்தியாவில் நாட்டின் செல்வத்தின் பெரும்பகுதியை வைத்திருக்கும் 200 - 300 பெருந்தொழிலதிபர்கள் இருக்கிறார்கள். பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜி.எஸ்.டி. வரியமைப்பும், இந்த அரசின் கொள்கைகள் கிடையாது, சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை அழிக்கும் ஆயுதங்கள்!
எனது நடை பயணத்தில் கிழிந்த ஆடைகளுடன் கலந்துகொள்ளும் எண்ணற்ற எளிய மக்களையோ, பேசும் பேச்சுக்களையோ கவனத்தில் கொள்ளாமல், நான் அணிந்திருக்கும் டி-ஷர்ட்டை ஊடகங்களும் மற்றவர்களும் விமர்சனம் செய்கிறார்கள். நாட்டில் பரவிவரும் வெறுப்பு மற்றும் வன்முறையை அகற்றிவிட்டு, மக்களின் கவனத்தை ஈர்ப்பதே நடை பயணத்தின் நோக்கம்.
எனது நடை பயணத்தில் குளிர்காலத்தில் டி-ஷர்ட் அணிந்திருப்பதால் என்னால், 110 நாட்களில் 3,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை நடந்தே கடக்க முடிந்திருக்கிறது. குளிரின் தாக்கம் எனக்கு ஏற்படவில்லை. இந்த நாட்டில், விவசாயிகள், ஏழைத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் ஏன் டி-சர்ட்கள் மற்றும் ஸ்வெட்டர்கள் இல்லாமல் இருக்கிறார்கள்? ஏன் கிழிந்த ஆடைகளில் இருக்கிறார்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள்” என்று காட்டமாக விமர்சித்துப் பேசினார்.
- தெ.சு.கவுதமன்