அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை நாளுக்குநாள் அதிகரித்துவரும் நிலையில், கட்சியின் பல்வேறு நிர்வாகிகளும் ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ் ஆகியோரை சந்தித்து தகளது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். இந்த குழப்பங்களுக்கு மத்தியில், வரும் 2 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடர்பான ஆலோசனை இன்று காலை நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கலந்துகொண்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளவில்லை. அதேநேரம் இ.பி.எஸ் தனது ஆதரவாளர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது.
மேலும், கட்சியின் மூத்த தலைவர்கள் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தம்பிதுரை ஆகியோர் ஒ.பன்னீர்செல்வத்துடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்குச் சென்று அவருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதேநேரம், எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் சி.வி.சண்முகம். எம்.சி சம்பத், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளதாகத் தகவல் வெளியானது.
இதற்கிடையே ஓ.பி.எஸ்ஸை சந்தித்து அவருக்கான தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார் அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி. இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, "ஓ.பி.எஸ் தான் கட்சியின் தலைமை. அவர் நினைத்தால், அவர் மனது வைத்தால் எடப்பாடி பழனிசாமியைக் கட்சியை விட்டு நீக்க முடியும். அப்படி நீக்குவதற்குக் கட்சியின் விதிகளின் இடமிருக்கிறது.
இ.பி.எஸ் துரோகம் செய்வதை நிறுத்த வேண்டும். நான்கு வருடத்தில் கொள்ளை அடித்தவர்கள் தான் அவர் பக்கத்தில் இருக்கிறார்கள். ஒன்றிய, மாவட்ட, நகரச் செயலாளர்கள் யாரும் இதில் முடிவெடுக்க முடியாது. தொண்டன்தான் முடிவெடுக்க முடியும். அதிமுகவில் நிலவும் ரவுடியிசத்துக்கு காரணம் ஜெயக்குமார் தான்" என்றார்.