புதுவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டிருக்கிறது! பெரும்பாண்மையை நிரூபிப்பதற்காக இன்று (22.02.2021) கூட்டப்பட்ட புதுவை சட்டப்பேரவையில் உரையாற்றிய முதல்வர் நாராயணசாமி, மத்திய பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. நம்பிக்கை வாக்கெடுப்பினை எதிர்கொள்ளாமல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் வெளிநடப்பு செய்தார் நாராயணசாமி. இதனால், பெரும்பான்மையை நிரூபிக்காததால் ஆட்சி கவிழ்ந்தது. நாராயணசாமிக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால்தான் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார் நாராயணசாமி.
இந்த நிலையில், நேற்று மாலையில் திடீரென திமுக எம்.எல்.ஏ.வெங்கடேசன் தனது பதவியை ராஜினாமா செய்ததுதான் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. திமுக எம்.எல்.ஏ. எதற்கு ராஜினாமா செய்ய வேண்டும்? அவரது ராஜினாமா முடிவு திமுக தலைமைக்குத் தெரியுமா? என்றெல்லாம் கேள்விகள் எதிரொலித்த நிலையில், "தலைமையிடம் சொல்லிவிட்டுத்தான் ராஜினாமா செய்துள்ளேன்" என்றார் வெங்கடேசன். அவரின் இந்த பதில், காங்கிரசை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த நிலையில், திமுக எம்.எல்.ஏ.வின் இந்த ராஜினாமா விவகாரத்தால், நாராயணசாமியை திமுக கைவிட்டுவிட்டதா? என்கிற கேள்வி புதுவை அரசியலில் உற்றுநோக்கப்படுகிறது. குறிப்பாக, "திமுக தலைமையின் அனுமதியோடுதான் வெங்கடேசன் ராஜினாமா செய்தார் என்பது உண்மையெனில், நாராயணசாமியின் ஆட்சியை திமுகவும் விரும்பவில்லை என எடுத்துக்கொள்ளலாம். திமுக தலைமையிடம் தெரிவிக்காமல் வெங்கடேசன் ராஜினாமா செய்திருந்தால், தங்கள் எம்.எல்.ஏ.க்களைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள திமுக நினைக்கவில்லை என்று அர்த்தம்.
அதேசமயம், தலைமைக்குத் தெரிவிக்காமலே அவர் ராஜினாமா செய்திருப்பதுதான் உண்மையெனில், வெங்கடேசனை இந்நேரம் கட்சியிலிருந்து திமுக தலைமை நீக்கியிருக்க வேண்டும். ஆனால், அது தற்போது வரை நடக்கவில்லை. அதனால், நாராயணசாமியின் அரசை விரும்பாமல் அவருக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும்விதமாகவே வெங்கடேசனின் ராஜினாமாவை திமுக எடுத்துக்கொண்டதாக நினைக்க முடிகிறது. மொத்தத்தில் நாராயணசாமியை திமுக கைவிட்டுவிட்டது "என்று ஆதங்கப்படுகிறார்கள் புதுவை காங்கிரஸார்.