Skip to main content

சட்டப்பேரவைக்கு பள்ளிச் சீருடையில் வந்த திமுக எம்.எல்.ஏக்கள்

Published on 03/02/2023 | Edited on 03/02/2023

 

puducherry dmk mla came legislative assembly in school uniform

 

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 15வது சட்டப்பேரவையின் பேரவைக் கூட்டம் இன்று காலை கூடியது. இந்த சட்டப்பேரவை கூட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில், தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம், அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், நாக. தியாகராஜன் ஆகியோர் பள்ளிச் சீருடை அணிந்து புத்தகப் பைகளை தோளில் மாட்டிக் கொண்டு சைக்கிளில் சட்டப்பேரவைக்கு வந்தனர். இதனால் சட்டப்பேரவை வளாகத்தில்  பரபரப்பு ஏற்பட்டது.

 

புதுச்சேரி சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சட்டப்பேரவையை 6 மாதத்திற்கு ஒருமுறை கூட்ட வேண்டும் என்பது விதி. அதன்படி 6 மாத காலம் முடிவடைய உள்ளதால் புதுச்சேரி சட்டப்பேரவை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. சபாநாயகர் செல்வம் திருக்குறள் வாசித்து சபை நிகழ்வுகளைத் தொடங்கினார். முதலாவதாக சபையில் மறைந்த ராணி எலிசபெத்துக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டது.

 

இந்நிலையில் ஒன்றிய அரசு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். மேலும் மாநில அந்தஸ்து விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு என்ன என்பதை பேரவையில் தெரிவிக்க வேண்டும் எனவும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் இரா.சிவா வலியுறுத்தினார். தொடர்ந்து மாநில அந்தஸ்து தீர்மானம் நிறைவேற்றக்கோரி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் கண்டன முழக்கங்களை எழுப்பிய நிலையில், இது குறித்து பேரவையில் பேச மறுத்ததாலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சீருடை மற்றும் புத்தகங்கள் வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாத அரசைக் கண்டித்தும் பேரவையிலிருந்து தி.மு.க மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

 

சபாநாயகர் செல்வம், அரசின் கூடுதல் செலவினங்களுக்கு பேரவையில் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில் பேரவையை காலவரையின்றி ஒத்தி வைத்து அறிவித்தார். பேரவை தொடங்கி 25 நிமிடத்தில் பேரவை ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக புதுச்சேரியில் பள்ளிகள் திறந்து 8 மாதங்கள் ஆகியும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தற்போது வரை சீருடைகள் மற்றும் புத்தகங்கள் வழங்காததைக் கண்டித்தும் உடனடியாக சீருடை, புத்தகங்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சைக்கிள், லேப்டாப் ஆகியவற்றை அரசு வழங்க வலியுறுத்தியும் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் லப்போர்த் வீதியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திலிருந்து பள்ளி சீருடை அணிந்து அடையாள அட்டையுடன் பையை மாட்டிக்கொண்டு சைக்கிளில் சட்டப்பேரவைக்கு வந்தனர். தொடர்ந்து சீருடை மற்றும் பையை மாட்டிக்கொண்டு சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்றனர்.

 

puducherry dmk mla came legislative assembly in school uniform

 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் இரா.சிவா, "பள்ளி மாணவர்களுக்கு உடனடியாக சீருடை வழங்க வேண்டும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற திமுக எம்பிக்கள் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க, கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வலியுறுத்தப்படும்" எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்