இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரி மற்றும் காரைக்காலின் பல்வேறு இடங்களில் பல்வேறு கோரிக்கைகள் அட்டை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, புதுச்சேரி அரசு கரோனா நோய் தொற்று தடுப்பு பணிகளில் ஒருங்கிணைத்து போர்க் கால அடிப்படையில் செயல்பட வேண்டும், பெருகிவரும் நோய் தொற்றுக்கு ஆளாகக்கூடியவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளையும் பேரிடர் மேலாண்மை சட்டத்தை பயன்படுத்தி அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்,
ஏனாமில் வழங்குவது போல் மற்ற பிராந்தியங்களிலும் அசைவ மற்றும் சத்துணவு வழங்க வேண்டும், காலியாக உள்ள மருத்துவர்கள் - செவிலியர்கள் - மருத்துவ ஊழியர்கள் பணி இடங்களை ஒப்பந்த அடிப்படையில் உடனடியாக நியமனம் செய்ய வேண்டும், சுகாதார துப்புரவு ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய சம்பள நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை அட்டை ஏந்தி முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி அரசு கதிர்காமம் இந்திராகாந்தி மருத்துவமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் அ.மு.சலீம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் ஆர்.விசுவநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாரா.கலைநாதன், நிர்வாகக் குழு உறுப்பினர் கு.சேதுசெல்வம், தொகுதி செயலாளர்கள் கே.சேகர், எஸ்.மூர்த்தி ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.
பாகூரில் தேசியக்குழு உறுப்பினர் இராமமூர்த்தி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அந்த தொகுதி செயலாளர் கலியமூர்த்தி முன்னிலை வகித்தார். தவளக்குப்பத்தில் மாநில துணை செயலாளர் து. கீதநாதன் தலைமையில், தொகுதி செயலாளர் ஏழமலை முன்னிலையிலும், அரியாங்குப்பத்தில் மாநில துணை செயலாளர் வி.எஸ்.அபிஷேகம் தலைமையில், நிர்வாக குழு உறுப்பினர் பூ.சரளா, தொகுதி செயலாளர் பூபதி ஆகியோர் முன்னிலையிலும்,
தட்டாஞ்சாவடி தொகுதியில் 5 மையங்களில் தொகுதி செயலாளர் முருகன் தலைமையிலும், காமராஜர் நகர் தொகுதியில் இரண்டு மையங்களில் தொகுதி செயலாளர் துரை.செல்வம் தலைமையிலும், லாசுப்பேட்டையில் தொகுதி செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையிலும், காலாப்பட்டு தொகுதியில் மாநில பொருளாளர் வ.சுப்பையா தலைமையில், தொகுதி செயலாளர் வீரக்குமார் முன்னிலையிலும்,
முத்தியால்பேட்டையில் தொகுதி செயலாளர் ஜீவானந்தம் தலைமையிலும், நெல்லித்தோப்பு தொகுதியில் மோகன் தலைமையிலும், முதலியார்பேட்டை தொகுதியில் கே.ஜி.ஏகாம்பரம் தலைமையிலும், ஏம்பலம் தொகுதியில் பெருமாள் தலைமையிலும், வில்லியனூர் தொகுதியில் கணேசன் தலைமையிலும்,
உழவர்கரை தொகுதியில் ரெட்டியார்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு நிர்வாக குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா தலைமையில், தொகுதி செயலாளர் அன்பழகன், முன்னாள் கவுன்சிலர் தேவசகாயம் ஆகியோர் முன்னிலையிலும், காரைக்கால் அரசு பொது மருத்துவமனை முன்பு மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.