
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி மொத்தம் 159 இடங்களைப் பெற்றுள்ளது. இதில் திமுக மட்டும் 133 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், அதிமுக கூட்டணி மொத்தம் 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இதில் அதிமுக மட்டும் 66 இடங்களில் வென்றுள்ளது. எதிர்க்கட்சியாக அதிமுக சட்டமன்றத்தில் நுழைகிறது. 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் என அக்கட்சியினர் நம்பியிருந்த நிலையில், 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் முதல் முறையாக முதலமைச்சராகப் பதவி ஏற்கவுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
அதே போல் நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக சட்டமன்றக் குழு தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதத்துடன், இன்று காலை 10 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆட்சி அமைக்க உரிமைக் கோரினார்.
அதன் பின்னர் இன்று நண்பகல் ஆளுநர் அவரது கோரிக்கையை ஏற்று ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில், வருகிற 7ஆம் தேதி காலை 9 மணி அளவில் அவர் முதல்வராகப் பதவி ஏற்கவுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்களின் பெயர்ப் பலகைகள் ஏற்கனவே அகற்றப்பட்டுள்ளன.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் சபாநாயகர், முன்னாள் அமைச்சர்கள் உள்பட அனைத்துஅறைகளிலும் இருந்த பெயர்ப் பலகைகள் அகற்றப்பட்டன. முன்னாள் அமைச்சர்கள் வைத்திருந்த பொருட்களையும் அவர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர். தற்போது சென்னை பசுமை வழிச் சாலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் குடியிருக்கும் வீடுகளை 10 நாட்களுக்குள் காலி செய்யுமாறு பொதுப் பணித்துறை உத்தரவிட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)