Skip to main content

“மூன்று அமைச்சர்கள், எந்த திட்டத்தில் அதிக வருமானம் வரும் என பார்த்து செய்துள்ளனர்”-அமைச்சர்களின் தந்திரங்களை விளக்கிய பி.டி.ஆர்!   

Published on 17/09/2021 | Edited on 17/09/2021

 

PTR explaining the ministers' tactics

 

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் செயல்படும் திட்டங்களை ஆய்வு செய்த தமிழக நிதி மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அங்கு நடந்த குற்றச்சாட்டுகளை எடுத்துரைத்தார். அதே போல் இதனை மத்திய, மாநில தணிக்கை குழு  மூலம் ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். மேலும் பெரியார் பேருந்து நிலையம் மக்கள் நிதியில் கட்டியது மாபெரும் தவறு என்றார்.  அதன் பின்னர் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மதுரை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வாகன நிறுத்த கட்டுமான பணிகள் மற்றும் பெரியார் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் வணிக வளாக பகுதிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டார். 

 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “ஸ்மார்ட் சிட்டி திட்டம் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது. இந்த ஆய்வு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. ஆய்வுக் கூட்டத்திற்கு முன் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோருடன் ஆய்வு மேற்கொண்டுள்ளேன். பொதுமக்கள் மற்றும் கடந்த அதிமுக அரசின் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூட கருத்து கேட்காமல் மூன்று அமைச்சர்களின் வருமானத்தைக் கருத்தில் கொண்டு மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் ஜனநாயக முறைப்படி நடத்தப்படவில்லை மூன்று அமைச்சர்கள், எந்த திட்டத்தில் தங்களுக்கு அதிக வருமானம் வரும் என்று பார்த்து இந்த திட்டங்களை செயல்படுத்தி உள்ளனர். மூன்று அமைச்சர்களின் ஊழலும் வருமானம் மட்டுமே முக்கியமாகப் பார்க்கப்பட்டுள்ளது.

 

அதற்கு சிறந்த உதாரணம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி இருந்த பேவர் பிளாக் சாலை மற்றும் ஆற்று மணல்கள் திருடப்பட்டு கருங்கல் போடுவதாக முறைகேடு செய்துள்ளனர். நன்றாக இருந்த சாலையைக் கெடுத்து ஊழலுக்காக, வருமானத்திற்காக அமைச்சர்கள் இது போன்ற திட்டங்களை செய்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் தாமதமாக உள்ள திட்டங்களை எவ்வாறு சிறப்பாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வுகள் செய்து வருகின்றோம். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே வாகனம் நிறுத்தத்திற்காக கட்டப்பட்டுள்ள வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். அவர்களுக்கு குளியலறை, கழிப்பறை உள்ளிட்டவை போதுமான வகையில் அமைப்பது குறித்தும் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வைகை ஆற்றங்கரையில் போடப்பட்ட சாலைகள் பல இடங்களில் பிளவு ஏற்பட்டு உள்ளது. அந்த பணிகள் தரமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது போன்ற திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் கூர்ந்து கண்காணிப்படவேண்டும்.

 

PTR explaining the ministers' tactics

 

இதுபோன்று முறையீடுகள் செய்யப்பட்டுள்ள திட்டங்கள் மத்திய, மாநில தணிக்கை துறை மூலம் கூர்ந்து கண்காணித்து எவ்வாறான முறைகேடுகள் நடந்துள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். மதுரையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒரு திறப்பு விழாவிற்கு சென்ற போது அந்த திட்டத்தில் கட்டப்பட்ட தரைதளம் உடைந்து விழுந்தது மக்களுக்கு ஞாபகம் இருக்கும். அதுபோன்ற ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக தான் நாங்கள் இதுபோன்ற ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றோம். முதல்வர் தலைமையிலான அரசு மக்கள் பணத்தை எவ்வாறு செலவு செய்ய வேண்டும் என்பது கடமையாக கொண்டு செயல்படுகின்றோம். வருமானம் வரக்கூடிய திட்டங்களில் கொஞ்சம் அரசு நிதியும், கொஞ்சம் கொஞ்சம் கடனும் பெற்று செய்தால் அதில் வரும் வருமானத்தை கொண்டு கடனை அடைக்க உதவியாக இருக்கும்.  சேவை மனப்பான்மையுடன் செய்யப்படும் திட்டங்கள் முழுமையாக அரசு நிதியில் இருந்து செய்ய வேண்டும். குடிநீர் இணைப்புக்கு பெறப்படும் நிதி அதிகமாக பெறப்படுகின்றது.

 

ஆனால் பயன்பாட்டிற்கு ஏற்றவகையில் வரி வசூல் செய்யப்படுவதில்லை. பணக்காரர்கள் மற்றும் ஏழைகளுக்கான வசூல் சற்று தான் வித்தியாசம் உள்ளது. அதனை முதலில் சரிசெய்ய வேண்டும். பெரியார் பேருந்து நிலையம் முழுமையாக மக்கள் நிதியில் கட்டியது; இதுமுற்றிலும் தேவையற்றது. பள்ளிகள் சுகாதாரத்தை மேம்படுத்தும் கழிப்பறை, குளியலறை கட்டுவதற்கு மக்களின் பணத்தை பயன்படுத்தலாம். வருவாய் தரக்கூடிய திட்டங்களில் மக்களின் பணத்தை முழுவதும் செலவு செய்யக் கூடாது. வருமானம் வரக்கூடிய திட்டங்களில் அரசு நிதி கொஞ்சமும் மீதமுள்ள நிதி கடன் பெற்று திட்டத்தை நிறைவேற்றினால் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் வரும் வருவாயைக் கொண்டு அந்த கடனை அடைக்க உதவியாக இருக்கும். அடுத்து வரும் ஆண்டுகளில் இவற்றை கருத்தில் கொண்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தொலைநோக்குத் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் மூலம் கட்டமைப்பு நிதி மேம்பாட்டு கழகம் மூலம் 70 கோடி ரூபாய் செலவு செய்து ஒரு திட்டமும் செய்யாமல் நிதி மக்களுக்கு பயன் இல்லாமல் தண்ணீராக கரைந்து சென்றுள்ளது.

 

உள்ளாட்சித் தேர்தலை நடத்தி உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து இதுபோன்ற திட்டங்களை எவ்வாறு  செயல்படுத்தலாம் என்று கருத்துக்கள் கேட்டுதான் இனி புதிய திட்டங்களை நாங்கள் செயல்படுத்துவோம். திட்டங்கள் அதிகம் கொண்டுவர, கொண்டுவர வளர்ச்சி அதிகரிக்கும் வளர்ச்சியின் மூலம் பொருளாதாரம் மேம்படும். தமிழக முதல்வர் ஏற்கனவே கூறியது போல் கட்சி வேறுபாடின்றி யார் மீது எங்கெங்கு குற்றச்சாட்டு உள்ளதோ காழ்ப்புணர்ச்சி இல்லாமல் உரிய ஆதாரம் இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்த அரசியல்வாதிகளை மட்டும் பேசாமல் அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகள் அனைத்தும் அடிப்படை தவறாக உள்ளது.

 

அந்த அறிவாளிகள் மேற்கொண்ட திட்டம் தங்களுக்கே தெரியும் பேவர் பிளாக் சாலையில் அகற்றி அங்கிருந்த ஆற்று மணலை திருடிய பின்னர் கருங்கற்களை பதித்தனர். அதில் அதிக சூடு ஏற்படுவதாகக் கூறி அதில் வெள்ளை நிற பெயிண்ட் அடித்துள்ளனர். இதுபோன்ற திட்டங்களைத் தான் அந்த அறிவாளிகள் செய்து உள்ளார்கள். பெரியார் பேருந்து நிலையத்தில் கடைசி நேரத்தில் திட்டத்தில் கூடுதல் நிதியை முறைகேடு செய்வதற்காக தரைதளத்தில் கடைகள் கூடுதலாக கட்டுவதற்கு நிதிகள் அதிகம் ஒதுக்கி உள்ளனர். பழி வாங்குவது இருக்கட்டும்; மக்களின் நிதியை முறையாக எவ்வாறு செலவிடுவது என்பது குறித்து எங்களுடைய பணிகள் இருக்கும். காழ்ப்புணர்ச்சி காரணமாக இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதனை பாடமாகக் கொள்ளவேண்டும் அப்படி செய்தால் மட்டுமே எதிர்வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடக்காது. இது போன்ற நடவடிக்கைகள் தான் முக்கியம் தனி நபர்களை தாக்குதல் செய்வது முக்கியமல்ல” என்றும் தெரிவித்தார். பெரியார் பேருந்து நிலையம் மற்றும் அங்குள்ள வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களையும் ஆய்வு மேற்கொண்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.