



வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் என்பது நீண்ட நாட்களாகத் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் இந்த போராட்டத்தில் இன்றைய தினம் உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் லக்கிம்பூர் பகுதியில், மத்திய உள்துறை இணை அமைச்சரின் மகன் அஜய் மிஸ்ராவின் சென்ற கார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளின் மீது மோதியது. இதில் விவசாயிகள் நான்கு பேர் மரணமடைந்தனர். மேலும் இப்பிரச்சனையில் நடைபெற்ற கலவரத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்திக்க, அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று (04/10/2021) அதிகாலை லக்னோவிலிருந்து சாலை மார்க்கமாக பன்வீர்பூர் கிராமத்திற்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, கிராம எல்லையிலேயே அவரை காவல்துறையினர் தடுத்து, கைது செய்தனர்.
பிரியங்கா காந்தியின் கைதை கண்டித்து காங்கிராஸார் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், மகிளா காங்கிரஸ் சார்பில் அண்ணா சாலை, தாராபூர் டவர் அருகே உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் உருவப் படத்தைக் கிழித்தும், அடித்தும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.