Skip to main content

பிரதமர் மோடி-பாமக அன்புமணி ராமதாஸ் சந்திப்பு!

Published on 09/06/2022 | Edited on 09/06/2022

 

Prime Minister Modi meets PMK Anbumani Ramadas!

 

பிரதமர் நரேந்திர மோடியை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று டெல்லியில் சந்தித்துப் பேசினார். பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது பாமகவின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், அந்தப் பொறுப்பில் சிறப்பாக செயல்பட வாழ்த்துவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

 

தமிழ்நாட்டின் நலனுக்காக காவிரி & கோதாவரி இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்தும்படியும், அதற்காக  சம்பந்தப்பட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள் மாநாட்டை பிரதமர் தலைமையில் நடத்த வேண்டும் என்றும்  அன்புமணி ராமதாஸ் அவர்கள் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும், அதன் ஒரு கட்டமாக அனைத்து ஆறுகளிலும் தடுப்பணைகளை கட்ட நடவடிக்கை எடுக்கும் படியும் பிரதமரிடம் கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது.

 

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும்; தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை உடனடியாக அமைக்க வேண்டும்; ஆணையத்தில் தமிழ்நாட்டிற்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் பிரதமர் நரேந்திர மோடியிடம் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.

 

இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்களுக்கு நீடித்தது. பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு மிகவும் சுமூகமாகவும், மன நிறைவளிக்கும் வகையிலும் இருந்ததாகவும் அன்புமணி ராமதாஸ் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“ஒரு கட்சி அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை” - ராகுல் காந்தி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rahul Gandhi says This is the first time a party has attacked the Constitution

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. மேலும், ஆளும் பா.ஜ.க.வும், காங்கிரஸும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தோல்வி பயத்தில் நடுங்கும் நரேந்திர மோடி. அதனால் தான் தொடர்ந்து பொய்களை ஒன்றன் பின் ஒன்றாக கூறி வருகிறார். நரேந்திர மோடி ஏழைகளின் தலைவர் அல்ல, கோடீஸ்வரர்களின் தலைவர் என்பதை இந்திய மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்திய மக்கள் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க எழுந்து நிற்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

தேர்தல் அவர் கையை விட்டு நழுவியது அவருக்குத் தெரியும். இந்திய வரலாற்றில் ஒரு அரசியல் கட்சி நேரடியாக அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்திய முதல் தேர்தல் இதுவாகும். நரேந்திர மோடி, 20-25 நபர்களுடன் சேர்ந்து, மக்களின் மிகப்பெரிய அதிகாரத்தை, அதாவது, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறார். அரசியலமைப்புச் சட்டம் வெறும் புத்தகம் அல்ல, அது ஏழைகளின் ஆயுதம், காங்கிரஸ் கட்சி இருக்கும் வரை உலகில் எந்த சக்தியாலும் இந்த ஆயுதத்தை மக்களிடமிருந்து பறிக்க முடியாது” எனப் பதிவிட்டுள்ளார்.