ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு அதிமுக, திமுக, நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், தமிழகம் வந்த சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் விழாவில் கலந்து கொள்வதற்காக வந்திருக்கிறேன். ஈரோடு கிழக்கு தேர்தல் பற்றி நான் என்ன சொல்வது. நான் சொல்வதை தமிழக பாஜக செய்வதில்லையே. வேறு மாநில பாஜக மாதிரி தமிழ்நாடு பாஜக இல்லை. பாஜக தனித்து நிற்க வேண்டும். எல்லா தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிற்கவைக்க வேண்டும்.
திமுகவிற்கு கொள்கை எதுவும் கிடையாது. நாட்டை பிரிப்பதற்காக பேசிக் கொண்டிருப்பார்கள் எப்பொழுதும். தேர்தல் வரும் பொழுது வேறு விதமாக பேசுவார்கள். நான் ஒருமுறை திமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்தேன். அப்பொழுது எல்லோரும் சொன்னார்கள் இரத்த ஆறு ஓடும் என்று. ஆனால், பூனை குட்டி கூட வெளியே வரவில்லை. திமுக நாட்டை பிரிப்பதற்காக உருவாக்கப்பட்ட இயக்கம். இங்குள்ள பூசாரிகளுக்கு எல்லாம் அச்சம் இருக்கிறது. அவர்களை திராவிடர் கழகத்தினர் ரொம்ப தொந்தரவு செய்கிறார்கள். அநாகரீகமாக தாக்கி பூசாரிகளுக்கு கஷ்டம் கொடுப்பது அவர்கள் தான். ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் சேர்ந்தார் என்றால் போச்சு. ராகுல் காந்திக்கு ஏதாவது வாய்ப்பு இருந்தால் அதுவும் போய்விடும். அண்ணாமலை என்ன செய்கிறார் என்று எனக்கு தெரியாது'' என்றார்.