மத்திய அரசின் வேளாண் சட்டத்தால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் என்று தடையை மீறி நடந்த கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு கரோனா ஊரடங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றி கிராம சபைக் கூட்டம் நடத்த ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் உத்தரவு பிறப்பித்தார்.
இதற்கிடையே கரோனா பரவல், அதிகமாக இருப்பதால் கிராமசபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனால் கிராம சபைக் கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் உடனடியாக ரத்து செய்யப்பட்டன. ஆனால், தி.மு.க ஊராட்சி தலைவர்கள் சார்பில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
அதன்படி ஆத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் தடையை மீறி கிராம சபைக் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு ஊராட்சி தலைவர் உலகநாதன் தலைமை தாங்கினார். ஆத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் மகேஸ்வரி முருகேசன் முன்னிலை வகித்தார். இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தி.மு.க மாநில துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி கலந்துகொண்டு பேசியபோது, “இந்தியா முழுவதும் வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால், வடமாநிலங்களில் கிராம சபைக் கூட்டம் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனாவை காரணம் காட்டி கிராம சபைக் கூட்டத்தை ரத்து செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டம் மக்களுக்கும் எதிரானது இந்தச் சட்டத்தின் மூலம் வேளாண் பொருட்கள் அதிக அளவு பதுக்கல் செய்யப்படும். இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் எனவே மத்திய அரசு வேளாண் சட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.” என்று கூறினார். அதனைத் தொடர்ந்து மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் ஆத்தூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் முருகேசன், விவேகானந்தன் உள்பட கட்சிப் பொறுப்பாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.