காஞ்சிபுரத்தில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடங்க இருந்த புரட்சி பயண தொடக்க விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே மாலை மற்றும் இரவு வேளைகளில் சென்னை மற்றும் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பொழிந்து வருகிறது. தற்போது மேலும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் ஓ. பன்னீர்செல்வம் தொடங்க இருந்த புரட்சி பயண தொடக்க விழா நடைபெற இருந்த இடத்தில் கனமழை பெய்து வருவதால் விழாவிற்கு வந்திருந்தவர்கள் ஒதுங்க கூட இடம் இல்லாமல் தவித்து வந்தனர். இதையடுத்து புரட்சி பயண தொடக்க விழா நடைபெற இருந்த இடத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து புரட்சி பயண தொடக்க விழாவிற்கு அங்கு வந்திருந்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். முன்னதாக அதிமுகவை மீட்டெடுப்பதற்காக இன்று (03.09.2023) முதல் புரட்சிப் பயணத்தை தொடங்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.