அதிமுக இபிஎஸ் தரப்பிலிருந்து போட்டியிடும் வேட்பாளரின் வேட்புமனு தாக்கல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக தனது கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு அத்தொகுதியை ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வேட்பாளராக அறிவித்து திமுக கூட்டணிக் கட்சிகள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகிறது. அதே சமயம் அதிமுகவின் ஒற்றைத் தலைமை பிரச்சனை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து தென்னரசுவும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து செந்தில் முருகனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று திமுக வேட்பாளர் இளங்கோவன், அதிமுக இபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசு, அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த் ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருந்தனர். இதனிடையே இன்று காலை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். ஈரோடு இடைத்தேர்தல் குறித்து விவாதிக்கலாம் என்ற தகவல் வெளியானது. இந்நிலையில் அதிமுக பழனிசாமி தரப்பில் வேட்புமனு தாக்கல் ஒத்திவைக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இன்று பிற்பகல் 12 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்ய இருந்த நிலையில் அதிமுக வேட்புமனு தாக்கல் ஒத்திவைக்கப்பட்டு பிப்.7 ஆம் தேதி நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.