Skip to main content

‘வாழ்க வசவாளர்கள்’ என்றே வாழ்த்துவோம்... மு.க.ஸ்டாலின்!

Published on 04/11/2020 | Edited on 04/11/2020
mkstalin

 

“மக்களை, மாணவர் நலனை, தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்க எள்ளளவும் முயற்சிக்காத எத்தர்கள், தங்களின் சுய அரிப்பைச் சொறிந்து கொள்ள ஒட்டுபவைதான் அநாமதேயச் சுவரொட்டிகள். தமிழ் மக்கள் இதற்குத் தரப்போகும் கடும் தண்டனை வரலாற்றில் மறக்க முடியாததாக இருக்கும் என எச்சரிக்க விரும்புகிறேன்” எனத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெட்கித் தலைகுனிந்து, பெயரோ முகவரியோ வெளியிடத் தெம்பும் திராணியுமற்ற சில திரைமறைவு தில்லுமுல்லுப் பேர்வழிகளால் தமிழ்நாட்டின் தெருக்களில் சில சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. சட்ட நெறிமுறைகளின்படி, அந்தச் சுவரொட்டிகளில் பொறிக்கப்பட்டிருக்க வேண்டிய அச்சக முகவரியும் இல்லை. ஊழல் கொள்ளைகளில் ஈடுபடுவோர், கொடுப்பவர் - வாங்கிக் கொள்பவர் பெயர்களைப் புதைத்து வைத்திருப்பார்கள் அல்லவா; அதைப்போல! எடப்பாடியைப் புகழும் வாசகங்கள் ஒரு பக்கமும், எதிர்க்கட்சித் தலைவரான என்னை இகழ்ந்து இன்னொரு பக்கமும் கொண்ட வாசகங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.


என்னை விமர்சிப்பதைப் பற்றி நான் கவலைப்பட வில்லை. ஆனால் ஜனநாயகத்தில் விமர்சனம் ஆரோக்கியமானதாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும் இருக்க வேண்டும். என்னை விமர்சிப்பவர்கள், விமர்சனம் செய்வதற்குரிய தகுதி உள்ளவராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவன் நான். தகுதி இல்லாத சில நபர்களால், போகிற போக்கில், வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்னும் நோக்கில், இத்தகைய சுவரொட்டிகள் ஒட்டப்படுவது, அவற்றில் இடம் பெற்றுள்ள வாசகங்களிலிருந்து தெரிகிறது. 

 

இந்த இழிசெயல் தொடர்ந்து நடந்து வருகிறது. அடையாளமற்ற, முகவரியற்ற இதுபோன்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டால், அதனால் ஏற்படும் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு, அதனை உடனடியாகத் தடுக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது; காவல்துறைக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் இருக்கிறது. ஆனால் இதுவரை அத்தகைய சுவரொட்டிகளை ஒட்டுவதைத் தடுக்கவோ, அல்லது அந்த அநாமதேயச் சுவரொட்டி ஒட்டியவர்களைக் கைது செய்யவோ எந்த மாவட்ட காவல்துறையும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. 

 

இதிலிருந்து என்ன தெரிகிறது? ஆட்சியில் இருப்போரின் அனுசரணையோடும், ஆதரவோடும்தான் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன என்பதைப் பொதுமக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். இந்தியக் குற்றவியல் சட்டம், புத்தகங்கள் பதிவுச் சட்டம், இந்தியத் தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டனை தரத்தக்க குற்றங்கள் இவை. 

 

பல மாவட்டங்களில் இந்தச் சுவரொட்டிகளைத் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் கிழித்து வருகிறார்கள். அச்செயல்களில் அவர்கள் ஈடுபட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தரம் தாழ்ந்த சுவரொட்டிகளைக் கண்டு, கழகத் தோழர்கள் கொள்ளும் ஆத்திரமும் ஆவேசமும் எனக்குப் புரியாமல் இல்லை.

 


தன்னை அவதூறு செய்து வைக்கப்பட்ட பேனரை, அனைவரும் இரவிலும் நன்றாகப் படித்துச் செல்ல வசதியாக, விளக்கு ஒன்றைப் பொருத்தி வைத்தார் பேரறிஞர் அண்ணா; ‘இந்த விளக்கு மட்டும் அண்ணாதுரை உபயம்' என்று எழுதி வைத்தார். அந்த வழியில் வந்தவர்கள் நாம். ‘வாழ்க வசவாளர்கள்’ என்றே வாழ்த்துவோம். நமது வெற்றி உறுதி என்பதை உணர்ந்து கொண்டு, நம்மை ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபடுகிறார்கள். இப்போது நாம் கடைப்பிடித்திட வேண்டியது பொறுமை, பொறுமை! ‘பொறுத்தார் பூமி ஆள்வார்’ என்பது முதுமொழி. ‘அகழ்வாரைத் தாங்கும் நிலம்’ என்பது வள்ளுவம்.

 

cnc

 

ஆட்சிக்கு முற்றிலும் எதிரான தமிழ் மக்களின் மனநிலையை மாற்ற என்னென்னவோ செய்து பார்க்கிறார்கள். எதுவும் பயன் தரவில்லை என்பதால், இப்போது சுவரொட்டிகளை ஒட்டுகிறார்கள். ஒட்டுகிறவர்கள் அனைவரையும் ஒட்டு மொத்தமாகப் பொதுமக்கள் ஓட ஓட விரட்டியடிக்கப் போகிறார்கள். பவிசுகளையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி, ஊடகங்களில் உள்ள சிலர் மூலம், தங்களுக்குச் சாமரம் வீசும் கட்டுரைகளையும், காட்சிகளையும் உருவாக்கி வரும் ஆளும் கட்சிக் கும்பலின் அடுத்த கட்ட உத்திதான், கண்ணும் கருத்தும் கூசும் இந்தக் கேவலமான சுவரொட்டிகள்.

 


கரோனாவில் இருந்து மக்களைக் காப்பாற்ற, தமிழக மாணவர்களின் கல்வி வாய்ப்பைக் காப்பாற்ற, தமிழ்நாட்டின் உரிமைகளைப் பெற எள் அளவுக்குக் கூட முயற்சிகள் எடுக்காத ஒரு கொள்ளைக் கூட்டம்; இருட்டறையில் குருட்டுப் பூனையைத் தேடும் எத்தர்களைப் போல, அர்த்தராத்திரியில் அநாமதேயச் சுவரொட்டிகளை ஒட்டுவதன் மூலமாக, சுய அரிப்பைச் சொறிந்து கொள்ள விரக்தியின் விளிம்பிலே நிற்பவர்கள் மேற்கொள்ளும் முயற்சி தொடருமானால், தமிழ் மக்கள் மன்றம் வழங்கப் போகும் கடும் ஆயுள் தண்டனை வரலாற்றில் மறக்க முடியாததாக இருக்கும் என்று எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
Petition filed by Senthil Balaji dismissed

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். ஒரு வருடத்திற்கு மேல் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் உள்ள நிலையில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களைச் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவை  தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்திருந்தது.

இந்த நிலையில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நிலுவையில் இருந்த நிலையில் மீண்டும் செந்தில் பாலாஜி தன்னை விடுவிக்க வேண்டும் என்று தொடர்ந்த வழக்கின் உத்தரவைத் தள்ளி வைக்க வேண்டும் என்று மேலும் ஒரு மனுவைத்தாக்கல் செய்திருந்தார். ஏற்கெனவே எம்.பி, எம்.எல்.ஏ.விற்கான நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவருவதால் மனு மீதான விசாரணையைத் தள்ளிவைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 

இந்த மனு தொடர்பான விசாரணை இன்று நீதிபதி அல்லி அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு வரும் 16 ஆம் தேதி பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

‘லட்சக்கணக்கான வீடுகள் கட்டித் தர இருக்கிறோம்’ - அமைச்சர் சக்கரபாணி!

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
We are going to build lakhs of houses Minister Chakrapani

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள தொப்பம்பட்டியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமை துவக்கி வைத்து, 53 பயனாளிகளுக்கு ரூ.12.88 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,, தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, அந்தத் திட்டங்களின் பயன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்.

முதலமைச்சர் எல்லோருக்கும் எல்லாம், தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடத்திக் கொண்டியிருக்கிறார். அந்த வகையில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் ஏற்கனவே பேரூராட்சி, நகராட்சி ஆகிய பகுதியில் நடைபெற்றது. இந்த முகாமில் பெறப்பட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் பொதுமக்களுக்கு சென்று சேரும் வண்ணம் மக்களுடன் முதல்வர் திட்டத்தை முதலமைச்சர் தருமபுரியில் தொடங்கி வைத்துள்ளார். 

We are going to build lakhs of houses Minister Chakrapani

தமிழ்நாடு முதலமைச்சர் தருமபுரியில் தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களில் 388 ஒன்றியங்களில் உள்ள 12,525 ஊராட்சிகளில் ஒவ்வொரு பகுதிகளிலும் 5 ஊராட்சிகளை இணைத்து அல்லது 20 ஆயிரம் மக்கள் தொகை கிராம ஊராட்சிகளை தேர்ந்தெடுத்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, அந்த மனுவின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு நலத்திட்டம் வழங்க இருக்கிறார். அந்த வகையில் இன்றைய தினம் திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி வட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, புளியம்பட்டி, கொங்கமுத்தூர், தொப்பம்பட்டி, வேலம்பட்டி, தும்மலப்பட்டி ஆகிய 6 ஊராடசிகளுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்களிடம் மனுக்களைப் பெற்று, அதற்கு தீர்வு காணும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெறுகிறது.

முதலமைச்சர் தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதி மட்டுமல்லாமல், சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி ஒரு பொற்கால ஆட்சியினை நடத்தி வருகிறரர். எனவே முதலமைச்சர ஆட்சி பொறுப்பேற்ற பின்பு குறிப்பாக பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 1 கோடி 14 இலட்சம் நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 1 இலட்சத்து 48 ஆயிரம் நபர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது. தகுதியுள்ள நபர்கள் அனைவருக்கும் கலைஞர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பெண்கள் நகர பேருந்துகளில் சென்றால் கட்டணமில்லா சலுகை வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 7 ஆயிரம் புதிய பேருந்துகள் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது தமிழ்நாடு முதலமைச்சர் 1 முதல் 5 வகுப்பு வரை படிக்கின்ற சுமார் 18 இலட்சம் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது. வருகின்ற 15 ஆம் தேதி அன்று அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் நிகழ்வை முதலமைச்சர் துவக்கி வைக்க இருக்கிறார். 

We are going to build lakhs of houses Minister Chakrapani

புதுமைப் பெண் திட்டத்தினை ஏற்படுத்தி மாதந்தோறும் ரூ.1000 வழங்கி வருகிறார். இத்திட்டத்தினை விரிவுபடுத்தி மாணவர்களும் பயன்பெறும் வகையில் தமிழ் புதல்வன் திட்டத்தினை ஏற்படுத்தி மாணவர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படவுள்ளது. தமிழ்நாட்டினை குடிசை இல்லா மாநிலமாக உருவாக்க கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்டிதர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் இப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ரூ.1000 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, காவேரியிலிருந்து குடிநீர் கொண்டு வரும் பணிகள், துரிதமாக நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக்கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு  முகாம்கள் 306 கிராமப்புற பஞ்சாயத்து பகுதிகளில் 11.07.2024 முதல் 23.08.2024  வரை 23 நாட்கள்  68 முகாம்கள் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை  நடைபெறவுள்ளது. அன்றாடம் பொதுமக்கள் அணுகும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, மின்சாரத்துறை, வீட்டு வசதி வாரியத்துறை, மருத்துவத்துறை, மாவட்ட தொழில் மையம், பால்வளத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, தாட்கோ, வேலைவாய்ப்புத்துறை, வேளாண்மைத்துறை, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, தொழிலாளர் நலத்துறை, பொது மேலாளர் (முன்னோடி வங்கி), மற்றும் மகளிர் திட்டம் ஆகிய 22 துறைகள் தொடர்புடைய கோரிக்கை மனுக்கள் இச்சிறப்பு முகாம்களில் பெறப்பட உள்ளது.

இவ்வாறு பெறப்படும் அனைத்து மனுக்களும் சம்மந்தப்பட்ட துறையினரால் பரிசீலனை செய்யப்பட்டு 30 தினங்களுக்குள் தகுதியின் அடிப்படையில் தீர்வு வழங்கப்படும். அரசின் திட்டங்கள் கடைகோடி மக்களுக்கும் சென்று சேரும் வகையில், மக்களுக்காகவே இந்த அரசு என்ற வகையில் செயல்பட்டு, இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் செயல்படுத்தப்படாத திட்டங்களை செயல்படுத்தி, பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார்” என்று கூறினார்.