அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் கடந்த 20.04.2023 அன்று அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியாகியது. இதனால் அதிமுகவின் கொடிகள், சின்னங்களை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.
மறுபுறம் ஓபிஎஸ் அணி சார்பில் நடைபெறும் திருச்சியில் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேடை, வண்ண விளக்குகள், சேர்கள் போன்றவை அமைக்கப்படும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநாடு ஏற்பாடுகளை ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளர்களான வைத்தியலிங்கம், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் பார்வையிட்டனர். ''நாங்கள் மூன்று லட்சம் பேர் வருவார்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால் இப்பொழுது சொல்வதை எல்லாம் பார்த்தால் நான்கு லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். 2010 ஆகஸ்ட் 14 ஆம் தேதி ஜெயலலிதா இங்கு மாநாடு போட்டார். அதுதான் திருப்புமுனை மாநாடாக இருந்தது. அதுபோல் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு இந்த மாநாடு திருப்புமுனையாக அமையும். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கட்டுப்படும் எனத் தேர்தல் ஆணையம் சொல்லி உள்ளது. அதனால் இதை யாரும் தடை போட முடியாது'' என மாநாடு ஏற்பாடு நிகழ்வுகளைப் பார்வையிட வந்த வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வைத்த பேனர்களை போலீசார் அகற்றியுள்ளனர். திருச்சி மாநாடு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் அவரது ஆதரவாளர்கள் பேனர்களை வைத்திருந்தனர். அந்த பேனரில் ஓபிஎஸ் புகைப்படம் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இபிஎஸ் ஆதரவாளர்கள் போலீசாரிடம் புகாரளித்த நிலையில் தற்போது அந்த பேனர்களை போலீசார் அகற்றியுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.