Skip to main content

“நாம் ஆண்ட பரம்பரை  வழியில் வந்தவர்கள்; அடுத்தவர்களுக்கு துதி பாடிக்கொண்டிருக்கிறோம்..” - பாமக கூட்டத்தில் ராமதாஸ் 

Published on 26/11/2021 | Edited on 26/11/2021

 

PMK Ramadoss speech at cuddalore pmk executive meeting

 

பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

 

பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், இக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது; “நாம் யாருக்குப் போராடி இடஒதுக்கீடு பெற்று தந்தோமோ, அந்த வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். ஆனால், தமிழக அரசு மேல்முறையீடு செய்து சரியாகவே செயல்படுகிறது. நல்ல வழக்கறிஞர்களைக் கொண்டு வழக்கை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். மதுரை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கான தடை உத்தரவு கிடைக்கும் என நிச்சயமாக நாம் நம்புகிறோம்.

 

தமிழ்நாட்டை நாம் ஆள வேண்டும், அன்புமணி முதல்வராக வேண்டும் என்ற எண்ணத்தோடு வீடு வீடாகச் சென்று திண்ணை திண்ணையாக இளைஞர்கள் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும். தமிழகத்தில் 60 இடங்களில் சுலபமாக வெற்றிபெற்றால் அன்புமணி ராமதாஸ் முதல்வராகி ஆள முடியும். அன்புமணி போல ஒரு திறமையானவர் யாரும் இல்லை, ஏன் மக்கள் ஆட்சியைக் கொடுக்க தயங்குகிறார்கள்.? வஞ்சகம் உள்ள கட்சிகளுக்கு வாக்கு போட்டுவிட்டீர்கள். ஒருமுறை பாமகவிற்கு வாக்கு சொலுத்துங்கள் என மக்களிடம் பிரச்சாரம் செய்யுங்கள். அதேபோல் சமூக வலைதளங்கள் மூலமும் பிரச்சாரம் செய்யுங்கள். அப்படி செய்யும்போது பாமக ஆட்சிக் கட்டிலை நோக்கிச் செல்லும், கோட்டையில் பாமக கொடி பறக்கும். அதை நோக்கி யூகங்கள், உழைப்புகள் இருக்க வேண்டும். இளைஞர்கள் வானத்தை வில்லாக வளைக்கலாம், மலையைத் தவிடுபொடியாக்கலாம். அன்புமணியை கோட்டையில் அமரவைப்பது உங்கள் கையில் உள்ளது. அன்புமணியை கோட்டையில் அமரவைப்போம் என உறுதியேற்றுக்கொள்ளுங்கள். 

 

இனிவரும் காலங்களில் ஒரு தொகுதியில் 1 லட்சம் வாக்குகளைப் பாமக பெற வேண்டும். 1 பூத்தில் ஆயிரம் வாக்குகளைப் பெற வேண்டும். நாம் ஆண்ட பரம்பரை வழியில் வந்தவர்கள். இன்று அடுத்தவர்களுக்கு நாம் துதி பாடிக்கொண்டிருக்கிறோம். பாட்டாளி மக்கள் கட்சி 2016இல் தனியாக நின்று வெறும் 23 லட்சம் வாக்குகளைப் பெற்றிருக்கிறோம். தலைவர் சொல்கிறார், நாம் 5.6% வாக்குகள் பெற்று 3வது பெரிய கட்சியாக இருக்கிறோம் என்று. எனக்கு வெட்கமாக இருக்கிறது; வேதனையாக உள்ளது.  60 லட்சம் வாக்குகள் பெற உழைக்கவில்லை.

 

42 ஆண்டுகள் மக்களுக்காகப் பாடுபட்டிருக்கிறேன். உங்களுக்காக குரல் கொடுக்க நான் ஒருவன் இன்னும் உயிருடன் இருக்கிறேன். வயதானவர்கள் பேசத்தான் முடியும், இனி இந்தக் கட்சி இளைஞர்களை நம்பித்தான் உள்ளது. கடலூரில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஆட்கள் இல்லை என்று சொல்லியிருந்தால் அந்தமானிலிருந்து கப்பலில் 50 பேரை அழைத்து வந்திருப்பேன்.

 

வீட்டில், கரோனாவிலிருந்து வயதானவர்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். முந்திரி தொழிற்சாலை தொழிலாளி கோவிந்தராஜ் வழக்கை நான் கையில் எடுத்திருக்கிறேன்,. நிச்சயமாக தவறு செய்தவர்களுக்குத் தண்டனை கிடைக்கும். காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

 

சட்டமன்றத் தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் தோல்வியை தழுவியுள்ளது பாமக. இதற்குக் காரணம் மாவட்டச் செயலாளர்கள்தான். உங்களால் முடியவில்லை என்றால், ஒரு மாடு மேய்க்கும் சிறுவனிடம் 1 லட்சம் வாக்கு வாங்க முடியுமா என்று கேட்பேன். அவன் முடியும் என்று சொன்னால் அவனையே மாவட்டச் செயலாளராக போட்டுக்கொள்வேன்.” இவ்வாறு அவர் பேசினார். 

 

கூட்டத்தில் பாமக மாநிலத் தலைவர் ஜி.கே. மணி, வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா. அருள்மொழி மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்