அதிமுகவுக்கு வரும் 2021 சட்டமன்றத் தேர்தல் முக்கியமானத் தேர்தலாக பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக சந்தித்த நாடாளுமன்றத் தேர்தலில் தேனியை தவிர அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு நடந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகள் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது அக்கட்சிக்கு ஒரு ஆறுதலை தந்தது.
கடந்த வருடம் நடந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் பதவியிடங்களை பெரும்பான்மை இடங்களில் பிடித்தது. அடுத்து அதிமுக, பேரூராட்சி மற்றும் விடுபட்ட மாவட்டங்களிலும் தேர்தலை நடத்த அதிமுக அரசு தயாராகி வருகிறது.
கடந்த வருடம் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போதிய இடங்கள் ஒதுக்கப்படவில்லை என்று பாமக, தேமதிமுக உள்ளிட்ட அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் வருத்தத்தில் உள்ளன. மேலும் பேரூராட்சி மற்றும் விடுபட்ட மாவட்டங்களிலும் தேர்தல் நடந்தாலும் அதிமுக போதிய இடங்களை ஒதுக்குவது சந்தேகம்தான் என்று நினைத்துள்ள பாமக, தேமுதிக கட்சிகள் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.
கடந்த வாரம் கட்சியினரை சந்தித்துப் பேசிய பிரேமலதா, கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கும் ஒரே கட்சி தேமுதிக தான். கூட்டணி என்பதால் குட்ட குட்ட குனிய மாட்டோம். குட்ட குட்ட குனியும் ஜாதி இல்லை தேமுதிக. நாங்கள் மீண்டு எழுவோம். 2021-ம் ஆண்டு தேர்தலில் தேமுதிக மிகப்பெரிய கட்சியாக வரும். விஜயகாந்த் தலைமையில் நல்லாட்சி வருவது தான் நோக்கம். விஜயகாந்த் ஆட்சி வரும் வரையில் ஓயமாட்டோம் என்று கூறினார்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், 2021ல் பாமக ஆட்சிக்கு வந்தாக வேண்டும். தொகுதிக்கு ஒரு லட்சம் வாக்காளர்களை நாம் பெற வேண்டும். தனியாக நாம் போட்டியிட்டு ஓர் இடத்தில் கூட வெற்றி பெறாதது கேவலமாக உள்ளது. பாமக தொடங்கி 32 ஆண்டுகளில் ஒருமுறை கூட ஆட்சிக்கு வரவில்லை. 70 முதல் 80 எம்எல்ஏக்கள் பெற்றால் இந்த முறை நாம் ஆட்சிக்கு வரும் திட்டம் உள்ளது. பாமக ஆட்சி அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த முடியாத நிர்வாகிகள் கட்சியில் ஒதுங்கி கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் ஒரு இடம் கூட பிடிக்காததால் 2021 சட்டமன்றத் தேர்தலில் பலமான கூட்டணியில் இடம்பெற்று போதிய எம்எல்ஏக்களை பெற வேண்டும் என்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. அதனால்தான் இப்போதே சட்டமன்றத் தேர்தல் பற்றிய பேச்சுக்களை வெளியே பேச ஆரம்பித்துவிட்டன இந்த இரு கட்சிகளும்.
40 தொகுதிகளுக்கு குறையாமல் கூட்டணியில் இடம் வாங்கி போட்டியிட வேண்டும் என்று பாமக நினைக்கிறது. மேலும் திமுகவை வடதமிழகத்தில் வீழ்த்த அதிமுக தங்களுடன்தான் கூட்டணி அமைக்க வேண்டும் என்று பாமக கணக்கு போட்டுள்ளது. நாங்க, ஜெயலலிதா இருந்தபோதே 40 தொகுதிகளை பெற்று போட்டியிட்டோம். இப்போது தங்ளுக்கு அதனைவிட கூடுதலாக இடங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்று தேமுதிக கணக்கு போட்டு வருகிறது. பாஜக தமிழக தலைவர்களும் தங்களுக்கு சட்டமன்றத் தேர்தலில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
கூட்டணிக் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகளை அதிமுக ஒதுக்கப்போகிறது என்று அக்கட்சியினரே கணக்கு போட்டு பார்த்து வருகின்றனர். கூட்டணிக்கு கட்சிகள் கேட்கும் தொகுதிகளை பார்த்தால் கூட்டணி கட்சிகளுக்கு நூறு தொகுதிகளுக்கும் மேல் போய்விடுமோ? பிறகு ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள், ஈ.பி.ஸ். ஆதரவாளர்கள் கேட்கும் தொகுதிகளை எப்படி பிரித்து கொடுப்பது போன்றகுழப்பத்திலும் அதிமுக உள்ளது. அதிமுகவில் உள்ள பாமக, தேமுதிகவை விட்டால் தங்களுக்கு கூட்டணி பலம் இல்லை என்ற பயம் வந்தும் என்பதால் சிக்கலை எப்படி அதிமுக தலைமை தீர்க்கும் என்று அதிமுகவினர் முணுமுணுத்து வருகின்றனர்.