8 நாள் அரசு முறை பயணமாக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் சென்றுள்ளார். முதல்வரின் இந்த வெளிநாட்டுப் பயணத்தில் முதலமைச்சர் மனைவி துர்கா ஸ்டாலின், முதல்வரின் உதவியாளர் தினேஷ், தலைமைச் செயலாளர் இறையன்பு, முதல்வரின் செயலாளர்கள் உமாநாத், அனுஜார்ஜ், தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன், செய்தித்துறை இயக்குநர் மோகன் ஆகியோர் உள்ளனர்.
25 ஆம் தேதி வரை சிங்கப்பூரில் தங்கும் முதல்வர் ஸ்டாலின், பல்வேறு தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்களைச் சந்திக்கிறார். இந்த சந்திப்பில் சில நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் எனத் தெரிகிறது. அதற்கான ஏற்பாடுகளை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்துள்ளார். 26 ஆம் தேதி சிங்கப்பூர் பயணம் முடிந்து முதலமைச்சர் ஜப்பான் செல்கிறார். அங்கும் முதலீட்டாளர்களைச் சந்திக்கிறார்.
இந்நிலையில் தமிழக முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தொழில் துறைக்கு முதலீடுகளை ஈர்த்தல் என்ற பெயரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் இன்பச் சுற்றுலாவிற்கு சென்றுள்ளார் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘ஏற்கனவே துபாய்க்கு சென்றபோது 6000 கோடி ரூபாய்க்கு முதலீடுகள் வரும் எனக் கூறியிருந்தார். ஆனால் 700 நாட்கள் கடந்த பிறகும் இதுவரை எந்த ஒரு முதலீடும் வந்ததாகத் தெரியவில்லை. ஊழல் செய்து சம்பாதித்த பணத்தை முதலீடு செய்வதற்காக தமிழக முதல்வர் வெளிநாடு செல்வதாக எழும் கேள்விகளுக்கு முதல்வர் தான் விளக்கம் சொல்ல வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.