Skip to main content

“ஐ.ஐ.டி. இயக்குநர் பொறுப்பில் இருந்து காமகோடியை நீக்க வேண்டும்” - பெ. சண்முகம் வலியுறுத்தல்!

Published on 20/01/2025 | Edited on 20/01/2025
P Shanmugam Emphasis Kamakodi should be removed from the post of  IIT director

சென்னை, மேற்கு மாம்பலத்திலுள்ள கோசாலையில் கடந்த 15ஆம் தேதி (15.01.2025) அன்று மாட்டுப்பொங்கல் விழா நடைபெற்றது. இதில் சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் கோமியம் குறித்து அவர் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, “கோமியம் சிறந்த மருத்துவ குணத்தைக் கொண்டது. காய்ச்சலைக் குணமாக்கும். பாக்டீரியா பாதிப்பு, பூஞ்சை பாதிப்புகளுக்கு எதிராகக் கோமியம் செயல்படக் கூடியது. மேலும் இது, செரிமான கோளாறு உள்ளிட்ட உடல் பாதிப்புகளை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது” எனப் பேசியிருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடியின் இந்த கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரத்தை, சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் அந்தஸ்தத்தை பயன்படுத்தி செய்வது, தமிழ்நாட்டின் ஜனநாயக சூழலுக்கு ஆபத்தானது. எனவே சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் பொறுப்பில் இருந்து காமகோடியை நீக்கி உரிய விசாரணை நடத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மிக உயர்ந்த தொழில்நுட்ப கல்வி மையத்தின் இயக்குநரான காமகோடி, கோமியம் குறித்து பெருமை பொங்க பேசுவது மக்களிடையே அறிவியலற்ற பார்வையை வளர்க்கவே உதவும்.

இது ஐ.ஐ.டி. போன்ற அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கண்டுபிடிப்புகள் மீதும், அறிவியல் கண்ணோட்டங்கள் மீதும் மக்களுக்கு நம்பிக்கை இழக்க செய்யவும், மூடநம்பிக்கையை வளர்க்கவும் உதவும். ஐ.ஐ.டி. இயக்குநரா?, ஆர். எஸ்.எஸ். பிரச்சாரகரா? என வேறுபாடு தெரியாத அளவிற்கு சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடியின் சொல்லும் செயலும் வெளிப்பட்டு வருகிறது. ஏற்கனவே காசி தமிழ் சங்கம் என்ற பெயரில் பா.ஜ.க. அரசியலுக்கான செயல்பாட்டு களமாக நிறுவனத்தை அனுமதித்தார். சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் இந்து மதம் அல்லாத பிற மத அடையாளம் கொண்டோர், சமூக சமூக நீதி நீதி காரணமாக இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்ந்தோர் பாரபட்சமாக நடத்தப்பட்டனர் என்பது வெளிச்சத்திற்கு வந்த உண்மை. இயக்குநரின் வெளிப்படையான ஆர். எஸ். எஸ் ஆதரவு  பிரச்சாரம் மேற்படி பாரபட்சத்தை அதிகரிக்கும்.

பிரதமர் மோடி அறிவியல் மாநாட்டை துவக்கி வைக்கும் உரையில் விநாயகர் உருவம் தான் முதல் குளோனிங் என பேசினார். இது வலுவாக எதிர்க்கப்பட்டது. அவர் தற்போது கோசாலை விழாவில் உடல் உபாதைகள் மற்றும் காய்ச்சல் போன்ற பல நோய்களுக்கு கோமியம் அற்புதமான மருந்து என உரையாற்றி இருப்பது, கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல. கோமியம் உடல் நலத்திற்கு தீங்கானது என இந்திய கால்நடை நிறுவன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே, உடனடியாக இயக்குநர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட வேண்டும். மேலும் இவருக்கு வழங்கிய முனைவர் பட்டம் உள்ளிட்ட பட்டங்கள் திரும்ப பெறப்பட வேண்டியவை என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சுட்டிக்காட்டுகிறது.

P Shanmugam Emphasis Kamakodi should be removed from the post of  IIT director

மேலும் பாஜக ஆட்சி, ஆய்வு நிறுவனங்களை, இதர தன்னாட்சி நிறுவனங்களை ஆர்.எஸ்.எஸ். மையங்களாக மாற்றி வருகிறது என குற்றம் சாட்டியது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில், காமகோடி ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரத்தை, சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் அந்தஸ்தத்தை பயன்படுத்தி செய்வது, தமிழ்நாட்டின் ஜனநாயக சூழலுக்கு ஆபத்தானது. எனவே சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் பொறுப்பில் இருந்து காமகோடியை நீக்கி உரிய விசாரணை நடத்திட வேண்டும் என மத்திய கல்வித்துறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்