“விமர்சனத்தையே சகித்துக் கொள்ள முடியாத ஒரு கட்சியின் ஆட்சியை இப்போது தான் பார்க்கிறேன்” என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பாஜகவை விமர்சனம் செய்துள்ளார்.
ஒடிஷா ரயில் விபத்து மற்றும் சிபிஐ விசாரணை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். அக்கடிதத்தில் 4% மட்டுமே கவாச் இயந்திரம் பொருத்தப்பட்டிருப்பது ஏன்? காலிப் பணியிடங்களை 9 ஆண்டுகளாக நிரப்பாதது ஏன்? என்பன போன்ற 11 கேள்விகளை எழுப்பி இருந்தார். இதற்கு பாஜகவின் முக்கியத் தலைவர்களான சதானந்த கவுடா, தேஜஸ்வி சூர்யா, பி.சி.மோகன் போன்றோர் பதில் கடிதம் அனுப்பினர். அதில் வாட்ஸாப் பல்கலைக்கழகத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு பிரதமருக்கு கடிதம் அனுப்பியது உங்களைப் போன்ற தலைவருக்கு பொருத்தமானது இல்லை எனக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர்.
இது குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “கார்கேவின் கடிதத்திற்கு பாஜக எம்.பி.க்களின் பதில் பாஜகவின் சகிப்புத்தன்மையின்மைக்கு மற்றொரு எடுத்துக்காட்டு. எதிர்க்கட்சித் தலைவராக உள்ள கார்கேவிற்கு பிரதமருக்கு கடிதம் எழுத உரிமை உண்டு. அந்த கடிதத்திற்கு பிரதமர் மோடி பதில் அளிப்பார் என மக்கள் எதிர்பார்க்கும் நிலையில் பதில் சொல்லக்கூட தகுதியற்றவராக பிரதமர் உள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட சிஏஜி அறிக்கைகள் கார்கேவின் விமர்சனத்தை உறுதிப்படுத்தியுள்ளது” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இவர்களால் விமர்சனத்தையே பொறுத்துக்கொள்ள முடியாது. நேற்று தமிழகத்தை சேர்ந்த பாஜக தலைவர் ஒருவர், “பிரதமரை விமர்சிப்பவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை” என பேசியிருந்தார். விமர்சனம் செய்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமா? விமர்சனத்தையே சகித்துக் கொள்ள முடியாத ஒரு கட்சியின் ஆட்சியை இப்போது தான் பார்க்கிறேன்” எனக் கூறினார்.