Skip to main content

“என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிக்குத் தான் எங்கள் ஆதரவு” - பாஜக அமைச்சர் நமச்சிவாயம்

Published on 28/09/2022 | Edited on 28/09/2022

 

"Our support is for NR Congress leader and Puducherry Chief Minister Rangasamy" - BJP Minister Namachivayam

 

“அவர்தான் இன்றும் இந்த கூட்டணிக்கு தலைவர் மற்றும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு தொடர்ந்து எங்கள் ஆதரவு உண்டு” என பாஜக மூத்த தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம் பேசியுள்ளார். 

 

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் திருபுவனை தொகுதியில் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அங்காளன். பாஜக கூட்டணி ஆதரவு எம்.எல்.ஏவான இவர் நேரடியாக பாஜகவிற்கு ஆதரவளித்து வருகிறார். கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அவரது தொகுதி புறக்கணிக்கப்படுவதாகவும், அரசு எந்தவித நலத்திட்ட உதவிகளையும், அரசு திட்டங்களையும் செயல்படுத்த விடுவதில்லை எனவும் குற்றம் சாட்டியிருந்தார்.

 

இந்நிலையில் கடந்த சில தினங்கள் தொகுதிக்கு எந்தவித திட்டங்களையும் அனுமதிக்காத முதலமைச்சர் ரங்கசாமி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், மத்திய அரசின் நிதி உள்ளிட்டவற்றை பாஜக துணையோடு வாங்கும் முதலமைச்சர் பாஜக இங்கு வளரக்கூடாது என்ற நோக்கத்தில், பாஜகவிற்கு ஆதரவளித்து வரும் அனைவரையும் புறக்கணிப்பதாகவும் குற்றம்சாட்டி  சில தினங்கள் முன் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவருக்கு ஆதரவாக அவரின் ஆதரவாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மேலும் தொகுதி மற்றும் சட்டமன்ற உறுப்பினரை புறக்கணித்தால் தொடர் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் எனவும் சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் தெரிவித்தார்.

 

என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி அரசுக்கு ஆதரவளிக்கும் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரே முதலமைச்சரை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டது புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் என்.ஆர்.காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்து கொண்டே முதலமைச்சரை விமர்சிப்பதற்கு பாஜக மற்றும் பாஜக ஆதரவு சுயேட்சை வேட்பாளர்களுக்கு என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

 

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி அரசு கொறடா ஆறுமுகம், “ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது. நான்கு தடவை முதல்வராக இருந்துள்ளார். கூட்டணி தர்மத்தை மீறி பேசிக்கொண்டு உள்ளீர்கள். நாளை சபாநாயகர் வந்தவுடன் அவரை சந்தித்து அதன் பின் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம்” எனக் கூறியுள்ளார்.

 

இந்நிலையில் பாஜக மூத்த தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அரசியலில் கூட்டணி வைப்பது என்பது இரு கட்சிகளுக்கும் ஒத்திருந்துதான் ஒரு கூட்டணி வைக்கின்றோம். கூட்டணி வைத்த பின் உங்களால் நாங்கள் வெற்றி பெற்றோமா? இல்லை எங்களால் நீங்கள் வெற்றி பெற்றீர்களா? என பேசுவதை அவர்கள் தவிர்த்திருக்கலாம். எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தலைவர் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்தான் இன்றும் இந்த கூட்டணிக்கு தலைவர். தொடர்ந்து எங்கள் ஆதரவு அவருக்கு உண்டு” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்