சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் அவரது தோழியான சசிகலா சிறை தண்டனை பெற்று, நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வெளியே வந்த நிலையில், அதிமுகவை அவர் மீட்டெடுக்க நடவடிக்கைகள் எடுப்பார் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால், திடீரென அரசியல் துறவறம் மேற்கொள்வதாகவும், பொது வாழ்விலிருந்து விலகுவதாகவும் அவர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். ஆனால் அண்மையில் அவர் அதிமுகவை மீட்டெடுக்கப் போவதாக அவரது தொண்டர்களுடன் பேசும் செல்ஃபோன் உரையாடல்கள் தொடர்ச்சியாக வெளியான நிலையில், சசிகலாவுக்கு எதிராக அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல் மாவட்ட வாரியாகவும் சசிகலாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அண்மையில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை குறித்து விசாரிக்க அப்போலோ மருத்துவமனை வந்த சசிகலா, அவரது காரில் அதிமுக கொடியைக் கட்டியிருந்தது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அதிமுகவை மீட்பதே எங்கள் இலக்கு என அமமுகவை சேர்ந்த டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''அதிமுக தொடங்கப்பட்டதிலிருந்து ஒற்றை தலைமையில்தான் செயல்பட்டது. மீண்டும் அது சரியாகும். கொள்கைக்காக என்னுடன் வந்தவர்கள் என்னுடன்தான் இருக்கிறார்கள். அதிமுகவை மீட்பதே எங்கள் இலக்கு. அந்த இலக்கை நோக்கித்தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம். திமுக எதையெல்லாம் எதிர்த்துப் போராடிக்கொண்டிருந்ததோ அதையெல்லாம் தற்பொழுது செய்துகொண்டிருக்கிறது'' என்றார்.