
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இன்று அதிமுக தலைமை அலுவலகம் சென்றார். நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர். இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஜேசிடி பிரபாகரன் "வருங்காலங்களில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகம் செல்லும் போது அவரை வரவேற்க தொண்டர்கள் கூடுவர்.
அப்படியான சூழலில் சில சமூக விரோதிகள் திட்டம் தீட்டியுள்ளனர். எனவே தலைமை அலுவகத்திற்கு கட்சியினர் செல்லும் போது எந்தவகையான இடையூறும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு வழங்குமாறு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து கேட்டுக்கொள்கிறேன்" எனக் காவல் துறையிடம் பாதுகாப்பு மனு ஒன்றைக் கொடுத்துள்ளார்.
இதன் பின் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், "ஓபிஎஸ் தனது சொந்த ஊரில் இருக்கிறார். ஒரு நாள் முன்னதாகவே அவர் தலைமை அலுவலகம் செல்லும் தேதி உங்களுக்கு தெரிவிக்கப்படும் . கட்சியின் குழப்பங்கள் எல்லாம் விரைவில் தீர்ந்து அதிமுக ஆட்சியில் அமரும். இன்று காலை எடப்பாடி பழனிசாமி ராசியை பார்த்து அலுவலகத்திற்குள் சென்றார்.
பொதுச்செயலாளர் பதவியில் சர்வாதிகாரமாக அவர் உட்காரும் போது எந்த ராசியை பார்த்தார் எனத் தெரியவில்லை. ஓ.பன்னீர்செல்வத்தின் பலம் எடப்பாடிக்கு தெரியவில்லை. ஓடுகிற கப்பலில் யார் போடும் ஓட்டை பெரிது என எடப்பாடி தரப்பினர் பேசி வருகின்றனர். கப்பல் ஓட வேண்டும் இலக்கை அடைய வேண்டும் என ஓபிஎஸ் சொல்கிறார். கொடநாடு விவகாரத்தில் அவர் மீது போடப்பட்டுள்ள வழக்கிலிருந்து தப்ப திமுகவுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு அவர் செயல்படுகிறார்" எனக் கூறினார்.