அதிமுகவில் ஒற்றைத் தலைமையைக் கொண்டு வந்த தீர்மானத்திற்கும், ஓ. பன்னீர்செல்வம் உள்பட நான்கு பேரை நீக்கிய தீர்மானத்துக்கும் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில், அதிமுக கட்சி, சின்னம் ஆகியவற்றை பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்து பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதிமுக பொதுச் செயலாளராகத் தன்னைத் தேர்தல் ஆணையமும், உயர்நீதிமன்றமும் அங்கீகரித்துள்ள நிலையில், பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் எனத் தொடர்ந்து கூறிவருவதாகவும், இது தொண்டர்களிடையே குழப்பத்தை விளைவிப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த சென்னை உயர்நீதிமன்றம், “அ.தி.மு.க. பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றைப் பயன்படுத்த கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வத்திற்கு இடைக்காலத் தடை. மேலும், இந்த வழக்கில் ஓ.பி.எஸ். பதில் அளிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை நவம்பர் மாதம் 30ம் தேதி ஒத்திவைத்தது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சிங்கப்பூருக்கு சென்று திரும்பிய ஓ.பி.எஸ். அ.தி.மு.க. கரை வேட்டி இல்லாமல் வந்தார். அதேபோல், தனது காரின் முன்னாள் இருக்கும் அ.தி.மு.க. கொடியும் அகற்றப்பட்டிருந்தது. இதுமட்டுமின்றி கடந்த வாரம் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவரது ஆதரவாளர்கள் வந்த கார்களில் அதிமுக கொடி அகற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று கூடியிருக்கும் தமிழ்நாடு சிறப்பு சட்டமன்றக் கூட்டத்திற்கு வந்த ஓ.பி.எஸ். அதிமுக கரை வேட்டியை கட்டாமல், காவி வேட்டியில் வந்தார். அதேசமயம், அவருடன் வந்த அவரது ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் அதிமுக கரை வேட்டியைக் கட்டியிருந்தனர். ஓ.பி.எஸ். மாலை போட்டு இருப்பதாகவும், அதனாலேயே கரைவேட்டி கட்டாமல் காவி வேட்டி கட்டியிருக்கிறார் என்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.