
அதிமுகவில் ஒற்றைத்தலைமை தொடர்பான விவகாரம் தலையெடுத்து அதிமுக தற்பொழுது எடப்பாடி பழனிசாமி அணி ஓ. பன்னீர்செல்வம் அணி என இரண்டு அணிகளாகப் பிரிந்து கிடக்கிறது. ஆனால் அதிமுகவின் பொதுச் செயலாளராகத்தன்னைத்தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது எனவே தாங்கள்தான் உண்மையான அதிமுக என எடப்பாடி தரப்பு ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அதனையொட்டி எடப்பாடி தரப்பினர் மதுரையில் நடத்திய மாநாடும் நடந்து முடிந்தது. அதேநேரம் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு அதிமுகவை மீட்பதாகச் சுற்றுப் பயணம், மாநாடு ஆகியவற்றைமேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அதிமுக கட்சியின் பெயர், கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்தத்தடை விதிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நாளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வர இருக்கிறது.

இது தொடர்பாக அவர் கொடுத்துள்ள மனுவில், ‘கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னரும் ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றைப் பயன்படுத்தி அறிக்கைகள் விட்டு வருகிறார். அவற்றைப் பயன்படுத்தி கட்சி நிகழ்ச்சிகளும் நடத்தி வருகிறார். கட்சிக்கான உரிமையியல் வழக்கில் தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் தன்னைப் பொதுச்செயலாளராக அங்கீகரித்துள்ள நிலையில், ஓபிஎஸ் தன்னை ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி வருகிறார். இது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே கட்சியினுடைய பெயரையோ, சின்னத்தையோ, கொடியோ ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்தத்தடை விதிக்க வேண்டும்’ எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)