நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதனையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வந்தனர். அந்த வகையில், தமிழக பாஜக கூட்டணியில் ஓ. பன்னீர்செல்வம் கூட்டணி அமைத்துள்ளார். சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஓ. பன்னீர் செல்வம் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக நிர்வாகி மற்றும் தனது ஆதரவாளர்களுடன் வந்த ஓ. பன்னீர்செல்வம் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவைத் தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தார். அதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்து வருகின்றனர்.