ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தொகுதியில் அதிமுக நேரடியாக போட்டியிட உள்ளதாக இ.பி.எஸ் அணி தெரிவித்திருந்ததது.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் ஓ.பி.எஸ் அணி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஓபிஎஸ், இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்களும் போட்டியிடுகிறோம். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எங்களுக்கு முழு உரிமை உள்ளதால் போட்டியிடுகிறோம். உள்ளாட்சி தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக நான் கையெழுத்திட்டேன், ஆனால் பழனிசாமி கையெழுதிடவில்லை. அதனால் தான் தொண்டருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் போனது. சின்னம் முடக்கப்படுவதற்கு எந்த காலத்திலும் நான் காரணமாக இருக்க மாட்டேன். பழனிசாமியுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதைத் தான் நாங்கள் விரும்புகிறோம். குழப்பத்தை உருவாக்கியது நாங்களல்ல, பிரிந்து கிடைக்கும் அணிகள் சேர வேண்டும். அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள கட்சியினர் தொடர்ந்து எங்களுடனும் பேசி வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் நாங்கள் ஆதரவு தருவோம்" எனத் தெரிவித்தார்.
இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் இரு தரப்பும் போட்டியிடுவதால் சின்னம் முடக்கப்பட்டால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், நாங்கள் போட்டியிட இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை என்றால், இந்திய தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்படும் சின்னத்தில் போட்டியிடும் சூழல் ஏற்படும். அப்படி ஒரு நிலை அதிமுகவிற்கு ஏற்படக்கூடாது என்று நினைப்பதால்தான் நாங்கள் இணையவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்" என்றார்.