துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் பாலமுருகன் உடல்நலக்குறைவால் மதுரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மேல் சிகிச்சைக்காக அவரை சென்னைக்கு கொண்டு வந்தார்கள். அதற்காக ராணுவத்துக்கு சொந்தமான ஏர் ஆம்புலன்ஸை மத்திய அரசு வழங்கியது. ஓ.பி.எஸ். கேட்டுக்கொண்டதன் பேரின் மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த ஏர் ஆம்புலன்ஸை வழங்கினார்.
இதுபற்றி ராணுவ அதிகாரிகளிடம் கேட்டபோது, ''ஆம்புலன்ஸ் என்பது பொதுவானது. ஆனாலும் ராணுவத்திற்கு சொந்தமான ஆம்புலன்ஸை உபயோகிப்பதற்கு சில விதிமுறைகள் உள்ளன. குரங்கனி போன்ற தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக மாநில அரசு கேட்டுக்கொண்டால் மத்திய அரசு ராணுவத்திற்கு சொந்தமான ஏர் ஆம்புலன்ஸை அனுப்பும்.
ஆனால் குரங்கனி தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற ராணுவத்திற்கு சொந்தமான ஏர் ஆம்புலன்ஸ் அனுப்பப்படவில்லை. அவர்களை மலையில் இருந்து பல கிலோ மீட்டர் போர்வையில் தூக்கி வந்து மதுரை மருத்துவமனையில் சேர்த்தார்கள். ஆனால் ஓ.பி.எஸ். சகோதரருக்கு ராணுவ ஏர் ஆம்புலன்ஸ் உபயோகிப்ப்பட்டுள்ளது. இவரை மதுரையில் இருந்து சென்னைக்கு ஏர் ஆம்புலன்ஸ்ஸில் கொண்டு சென்றிருக்கிறார்கள். ஓ.பி.எஸ். சகோதரர் ஒரு தனி நபர். இவருக்கு ஏர் ஆம்புலன்ஸ் தேவைப்பட்டிருந்தால் கோவையில் உள்ள தனியார் ஏர் ஆம்புலன்ஸ்ஸை ம.நடராஜனுக்கு பயன்படுத்தியதைப் போல பயன்படுத்தியிருக்கலாம்.
மத்திய அரசிடம் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி ஓ.பி.எஸ். தம்பி ராணுவ ஏர் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். இது முற்றிலும் விதிமுறைகளை மீறிய செயல்'' என்கிறார்கள்.
இது நிச்சயம் நாடாளுமன்றத்தில் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிரான புகாராக எழும் என்கிறார்கள்.