Skip to main content

“தண்ணீர் பாட்டிலை பார்த்தாலே அலர்ஜி” - ஓ.பி.எஸ்.

 

OPS Comment about ADMK General Secretary election

 

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தேதியை இ.பி.எஸ். அறிவித்து, இன்று முதல் ஆளாய் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ள நிலையில், ஓ.பி.எஸ். அணி சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரன், ஓ.பி.எஸ். ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

 

இதில் பேசிய ஓ.பி.எஸ், “ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிமுகவின் அமைப்புத் தேர்தல் நடத்தவேண்டும் என்பதுதான் கட்சியின் சட்டவிதி. கட்சியின் உட்சபட்ச பதவியில் இருக்கப்போகிறவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அவர் வந்துதான் கட்சியில் உள்ள மற்ற அமைப்பு ரீதியான தேர்தல்களை நடத்த வேண்டும். 

 

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடப்பதற்கு முன்பாக புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கும், ஏற்கனவே உறுப்பினர்களாக இருப்பவர்கள் புதுப்பித்துக் கொள்ளவும் உறுப்பினர் படிவம் கொடுக்க வேண்டும். அதன்பிறகு உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்க வேண்டும். இந்தப் பணிகள் எல்லாம் முடிந்த பிறகுதான் கட்சியின் உட்சபட்ச தேர்தல் நடத்த வேண்டும். 

 

எதையுமே முறைப்படி செய்யாமல் பிக்பாக்கெட் அடித்துச் செல்வதுபோல் பொதுச்செயலாளர் தேர்தல் நடக்கிறது; இது ஏற்றுக்கொள்ளக் கூடியதா. கேடிகளையும், ரவுடிகளையும் காலை ஐந்து மணிக்கே அழைத்து வந்து உட்கார வைத்து பொதுக்குழு நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளரான நானும், இணை ஒருங்கிணைப்பாளரான அவரும் சேர்ந்து எடுத்த தீர்மானங்களைப் புறக்கணித்து, கட்சியின் பொருளாளர் எனும் முறையில் பொதுக்குழுவில் கட்சியின் வரவு செலவை நான் வாசிக்க வேண்டும். அதற்குக் கூட வாய்ப்பு இல்லாமல், நிகழ்ச்சி நிரல் பின்பற்றாமல் அந்தப் பொதுக்குழு நடைபெற்றது. தண்ணீர் பாட்டிலை பார்த்தாலே ஒரு அலர்ஜி வருகிறது. எவ்வளவு அராஜகம் நிறைவேறியது என்பது உங்களுக்கு தெரியும். 

 

இந்தியத் தேர்தல் ஆணையம் அந்தப் பொதுக்குழுவை அங்கீகரிக்கவில்லை. 11ம் தேதி அவர்களாகவே ஒரு பொதுக்குழு நடத்தி சட்டவிதிகளை திருத்தியது செல்லாது என்பதால் தான் கீழ் நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற அமர்வு, உச்சநீதிமன்றம் வரை சென்றோம். அங்கெல்லாம் பல தரப்பான தீர்ப்புகள் வந்தன. அதன்பிறகு மக்கள் மன்றத்திற்கு வந்தோம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்களும் கட்சி தொண்டர்களும் இவர்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தால் இவர்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும். 

 

ஒரு சின்ன தொகுதியில் இரட்டை இலை சின்னத்தை கொடுத்து எங்கள் வேட்பாளரை திரும்பப் பெற்ற பிறகு 66 ஆயிரம் வாக்குகளை இழந்து அதிமுகவை தோற்கடிக்கச் செய்தவர் யார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். 

 

எம்.ஜி.ஆர். கட்சியை உருவாக்கியபோது கட்சியின் சட்டவிதி எப்படி இருக்கவேண்டும் என வடிவமைத்தார். அதைத்தான் ஜெயலலிதாவும் 30 ஆண்டுகளாக கடைப்பிடித்தார். கட்சி உருவானதிலிருந்து 50 ஆண்டுகள் இன்று வரை கட்சி சட்டவிதியின்படி தான் நடந்தது. அதையெல்லாம் தூக்கிப்போட்டாகிவிட்டது. 

 

கட்சியின் நிரந்தரப் பொதுச்செயலாளர் ஜெயலலிதா என நாம் கொடுத்த அந்த மரியாதையை தனக்கு உரியது என தானே பட்டம் சூடிக்கொள்வது போல நிறைவேற்றிவிட்டு, ஒரு சாதாரண தொண்டன் கூட பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடலாம் என்பதையும் மாற்றி, பத்து மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும், பத்து மாவட்டச் செயலாளர்கள் வழிமொழிய வேண்டும், ஐந்து வருடம் கட்சியின் தலைமை கழக பொறுப்பில் இருக்க வேண்டும் என சட்டவிதிகளை மாற்றி, கோடீஸ்வரர்கள் தான் அந்தப் பதவிக்கு போட்டியிட முடியும் எனும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. தானும் தன்னைச் சுற்றி இருப்பவர்களும் தான் கட்சியின் பதவிகளுக்கு வரவேண்டும் என சட்ட விதிகளை மாற்றுவது எந்த விதத்தில் நியாயம். 

 

தமிழகத்தில் இதுவரை இவ்வளவு சர்வாதிகாரியாக எந்த அரசியல்வாதியும் இருந்ததில்லை. இன்று அந்த நிலைக்கு அவர் வந்துள்ளார். அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோர் சகோதரத்துவத்துடன் கட்சியை நடத்தினர். ஜெயலலிதா தாய் உள்ளத்தோடு கட்சியை நடத்தினார். இவர் எப்படி நடத்துகிறார். தான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என அனைத்திலும் தோல்வி. நாடாளுமன்றத்தில் எங்கள் தேனி மாவட்டத்தில் மட்டுமே வெற்றி. மற்ற 38 தொகுதியிலும் தோல்வி. இந்த நிலைமைக்கு கட்சியை கொண்டு சென்றது யார். 

 

எல்லாமே தப்பு தப்பாகச் செய்கிறார்கள். களத்திற்குச் சென்று மக்களை நேரடியாகச் சந்திக்கும்போது அவர்களுக்கு தெரியும். சிவகங்கைக்குச் சென்றபோது விமானத்தில் அவருடன் வந்த இளைஞர் உணர்ச்சிவசப்பட்டு எப்படி பேசினாரோ, அந்தக் கருத்து தான் தமிழ்நாடு முழுக்க நிலவி நிற்கிறது. தமிழ்நாட்டில் அவர் எங்கு சென்றாலும் இந்த மாதிரியான எதிர்ப்பலை அவரை நோக்கி பாயும். இந்த அலையை நாம் உருவாக்கவில்லை. அவரே உருவாக்கிக் கொண்டிருக்கிறார்” என்று தெரிவித்தார். 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !