Skip to main content

மத்திய பட்ஜெட்டிற்கு எதிர்ப்பு; ஆர்ப்பாட்டத்தை அறிவித்த திமுக!

Published on 25/07/2024 | Edited on 25/07/2024
Opposition to Union Budget DMK announced the demonstration

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 22 ஆம் தேதி (22.07.2024) தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் நடைபெறவுள்ளது. இதன் ஒரு பகுதியாக 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் (23.07.2024)  தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார். அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி இருந்தன. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இத்தகைய சூழலில் தான் மத்திய பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு எந்த திட்டமும் அறிவிக்காததை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் நேற்று (24.07.2024) போராட்டம் நடத்தினர். இதில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சி எம்பி ஜெயா பச்சன், திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி டெரெக் ஓ பிரையன் எனப் பலரும் கலந்து கொண்டனர். மேலும் நாடாளுமன்றத்தின் நுழைவாயிலிலும் திமுக எம்.பி,.க்கள் பல்வேறு முழக்கங்களை எழுப்பியும், கைகளில் பதாகைகளை ஏந்தியும் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் மத்திய பட்ஜெட் அறிக்கையில் தமிழகத்தை வஞ்சித்த பா.ஜ.க. அரசைக் கண்டித்து அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

Opposition to Union Budget DMK announced the demonstration

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கை என்பது இந்திய நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பங்கினை பகிர்ந்தளித்து நாடு முழுவதும் சமச் சீரான வளர்ச்சியை உருவாக்கிட உதவுவதுடன், நாட்டில் வாழும் கடைக்கோடி மனிதர்களின் வாழ்வை மேம்படுத்தும் கொள்கை பிரகடனமாகவே இருக்க வேண்டும். ஆனால் இந்த ஆண்டின் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை, ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கான நிதிநிலை அறிக்கையாக தெரியவில்லை.

மாறாக, தங்கள் ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை தாராளமாக அள்ளிக் கொடுத்தும், நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தை கக்கிடும் வகையில் இந்த ஆண்டின் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது. மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி, தமிழ்நாடு சந்தித்த இரண்டு தொடர் பேரிடர் இழப்புகள் ஆகியவற்றிற்கு நிதி வழங்கிட வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகளை முற்றிலுமாக புறக்கணித்து, சில மாநிலங்களுக்கு மட்டும் பேரிடர் நிதி அள்ளி வழங்கப்பட்டுள்ளது.

Opposition to Union Budget DMK announced the demonstration

மத்திய நிதிநிலை அறிக்கையில் மாற்றாந்தாய் போக்குடன் தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க. மத்திய அரசைக் கண்டித்து வருகிற ஜூலை 27 ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10.00 மணியளவில், மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்