தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சில தினங்களுக்கு முன்பு சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அவருக்கு, திராவிட அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு, சீமான் வீடு அமைந்துள்ள நீலாங்கரை பகுதியில் மே 17 இயக்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது.
அதே நேரம், ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலை, அதிமுக, பா.ஜ.க த.வெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன. அதனால், இருமுனை போட்டியாக அமைந்திருக்கும் தி.மு.கவுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் இடையே பிரச்சாரப் போர் நடந்த வருகிறது. இரு கட்சியினரும், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈரோடு தொகுதியில் நேற்றில் இருந்து பரப்புரை மேற்கொண்டு வந்தார். தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்த நிலையில், பரப்புரையில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறும் என சீமான் பரப்புரையில் காவல்துறையினர் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்று சீமான் பரப்புரை மேற்கொண்டிருந்த போது, பெரியார் குறித்து அவதூறாக பேசியதாகக் கூறி திமுகவினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். அங்கிருந்த காவல்துறையினர், அவர்களை பிடித்து அப்புறப்படுத்தினர். இருப்பினும், அவர்கள் சாலையில் அமர்ந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.