
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை மிகத் தீவிரமாக இருந்துவருகிறது. இதனைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போக்குவரத்து அமைச்சர் ராஜகண்ணப்பன், “நாளை (16.05.2021) ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க உள்ளேன். மகளிருக்கு இலவச பேருந்து பயணத் திட்டம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.
மதுரை, திருச்சி, கோவை போன்ற நகரங்களில் அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து முன்களப் பணியாளர்களுக்குப் பேருந்துகள் இயக்குவது குறித்து முதலமைச்சருடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும். கரோனா தொற்று ஒழிப்பு நடவடிக்கை நிறைவேறிய பிறகு, 1 லட்சத்து 22 ஆயிரம் தொழிலாளர்களும், 20 ஆயிரம் பேருந்துகளும் இருக்கக் கூடிய போக்குவரத்து துறையை சீரமைக்கும் பணிகள் துவங்கப்படும்.
முதல்வர் மற்றும் சுகாதார மந்திரிகளின் ஆலோசனைப் படி, போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கலந்து பேசி, தேவைப்பட்டால் மாவட்டந்தோறும் ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட ஆம்புலன்ஸ் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.