Skip to main content

ஆன்லைன் ரம்மி தடை மசோதா - இறுதி நேரத்தில் விளக்கம் கேட்கும் ஆளுநர்

Published on 24/11/2022 | Edited on 25/11/2022

 

 Online Rummy Ban Bill - Governor's Letter to Tamil Nadu Govt

 

ஆன்லைன் விளையாட்டு பற்றி ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. சந்துரு தலைமையிலான குழு கடந்த ஜூன் மாதம் தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்திருந்தது. ஆன்லைன் விளையாட்டுகளுக்குத் தடை விதிக்கும் அவசரச் சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை கடந்த செப்டம்பர் 26- ஆம் தேதி அன்று ஒப்புதல் அளித்திருந்தது. அதைத் தொடர்ந்து, அக்டோபர் 19- ஆம் தேதி சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதா நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

 

அவசரச் சட்டத்திற்கு ஆறு மாதங்களும், சட்ட மசோதாவிற்கு ஆறு வாரத்திற்கும் கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற நிலையில் ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார். ஆனால் சட்ட மசோதாவிற்கு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் பல்வேறு அரசியல் கட்சிகள் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தன.

 

சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பதற்கான காலவரையறை 27 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இன்று ஆன்லைன் ரம்மி தடை மசோதா தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தமிழக ஆளுநரின் கேள்விக்குத் தமிழக அரசின் சார்பில் இன்று மாலைக்குள் பதில் அளிக்கப்படும் என சட்டத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வாம்மா மின்னல் என்பது போல ஆளுநர் இருக்கிறார்” - அமைச்சர் உதயநிதி கலகல பேச்சு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Governor is like Lightning Minister Udayanidh speech 

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரகாசை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மொடக்குறிச்சி, ஒத்தக்கடை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வடிவேலு காமெடியில் வருவதுபோல், ‘வாம்மா மின்னல்’ என ஆளுநர் இருக்கிறார். ‘வாம்மா மின்னல்’ என்பது போல ஆளுநர் எப்போது வருவார். எப்போது போவார் என்றே தெரியாது” எனப் பேசி கூட்டத்தில் இருந்த மக்களிடம் கலகலப்பை ஏற்படுத்தினார். 

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.