Skip to main content

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் தாக்கல்!

Published on 23/03/2023 | Edited on 23/03/2023

 

Online gambling ban bill filed again!

 

2023 - 2024ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் கடந்த 20ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 21ம் தேதி தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தால் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று யுகாதி என்பதால் சட்டப்பேரவைக்கு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், இன்று பட்ஜெட் மீதான விவாதம் சட்டசபையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

கூட்டத்தொடர் துவங்கியதும் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பாடகி வாணி ஜெயராம் மறைவிற்கும் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விளக்கமளித்தார். இதனை அடுத்து, கிருஷ்ணகிரியில் கொலை செய்யப்பட்ட ஜெகன் குறித்த விவகாரத்தை கவன ஈர்ப்பு தீர்மானமாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

 

இதன் பின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தாக்கல் செய்த போது பேசிய அவர், “ஆன்லைன் சூதாட்டங்களால் பணத்தை இழந்து இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர்; அந்த வேதனையோடுதான் உரையை தொடங்குகிறேன்; பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என்றே 10,735 மின்னஞ்சல்கள் வரப்பெற்றன; அதில் 27 மட்டுமே ஆன்லைன் சூதாட்டங்களுக்கு ஆதரவாக வந்துள்ளன. அரசியலில் மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம்; ஆனால் மனித உயிர்களை பலி வாங்கும் ஆன்லைன் சூதாட்டங்களை ஒழிப்பதில் இதயம் உள்ள யாருக்கும் மாறுபட்டக் கருத்து இருக்க முடியாது; இருக்கவும் கூடாது; மாநிலத்தில் உள்ள மக்களைக் காக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு.. மீண்டும் சொல்கிறேன் மாநில அரசுக்கு உரிமை உண்டு; மனசாட்சியை உறங்கச் செய்துவிட்டு எங்களால் ஆட்சி நடத்த முடியாது” எனக் கூறினார்.

 

இதனைத் தொடர்ந்து மசோதா குறித்து பேசுவதற்கு அனைத்துக் கட்சிகளிலும் உறுப்பினர் ஒருவரை பேசுமாறு சபாநாயகர் அப்பாவு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், “ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவை நிறைவேற்ற சட்டமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என ஆளுநர் சொல்வதை ஏற்க முடியாது; ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் உரிமையாளர்களை ஆளுநர் ஏன் சந்திக்க வேண்டும்? அந்த சந்திப்பில் உள்நோக்கம் இருக்குமோ என சந்தேகம் உள்ளது; தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்” எனக் கூறினார்.

 

கொங்கு மக்கள் தேசியக் கட்சித் தலைவரான ஈஸ்வரன், “ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்பது படிக்காத பாமர மக்கள் கூட ஏற்கும் கோரிக்கை; ஆன்லைன் ரம்மி என்பது ‘கேம் ஆஃப் சான்ஸ்’தானே தவிர, கேம் ஆஃப் ஸ்கில்’ அல்ல; ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் சட்ட மசோதாவை ஆளுநர் மீண்டும் திருப்பி அனுப்ப முடியாது” எனக் கூறினார்.

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆளூர் ஷாநவாஸ், “ஆளுநர் ஆர்.என்.ரவி ஆன்லைன் சூதாட்டங்களை நடத்தும் நிறுவனங்களிடம் கருத்து கேட்டுள்ளார்; பேரவையில் ஆளுநருக்கான அனைத்து மரியாதையும் வழங்கப்படுகிறது; ஆனால், பேரவையிலேயே ஆளுநர் மரபுகளை மீறுகிறார்; ஆளுநரின் அதிகாரம் சட்டப்படி வரையறுக்கப்பட்டுள்ளது; ஆனால், அவர் அதை தொடர்ந்து மீறுகிறார்; ஆளுநரின் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும்” என்றார்.

 

அவை முன்னவரான துரைமுருகன், “ஆளுநர் செய்தது பெரிய தவறு என்பதை எடுத்துரைத்து விமர்சிக்க அனைத்து உரிமைகளும் உள்ளது; சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை நிலுவையில் வைத்துள்ளதால் ஆளுநரை விமர்சிக்கும் உரிமை பேரவைக்கு உள்ளது” எனக் கூறியுள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

அடுத்தகட்டத்திற்கு தயாராகும் பொற்பனைக்கோட்டை; துவக்கி வைக்க இருக்கும் முதல்வர் 

Published on 17/06/2024 | Edited on 17/06/2024

 

தமிழ்நாட்டில் எஞ்சியுள்ள சங்ககால வட்டக்கோட்டை களில் சற்றும் சிதிலமடையாத கோட்டை, கொத்தளம், அகலியுடன் புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் உள்ளது. கோட்டையின் நுழைவாயில்களில் காவல் தெய்வமாக முனீஸ்வரன், காளியம்மன் போன்ற காவல் தெய்வங்கள் கோயில்களாக கட்டி வழிபட்டு வருகின்றனர்.

இந்த கோட்டைக்குள் உள்ள நீர்வாவிக் குளக்கரையில் துணி துவைக்கப் பயன்படுத்தப்பட்ட கல்லில் தமிழி எழுத்துகளில் உள்ள கல்வெட்டு ஒன்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து கோட்டைப் பகுதியில் அகழாய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. தொடர்ந்து தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அகழாய்வு செய்தது. அடுத்தகட்டமாக தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வாளர் தங்கத்துரையை இயக்குநராகக் கொண்டு அவரது ஆய்வுக் குழுவினர் கடந்த ஆண்டு அகழாய்வு செய்தனர்.

அகழாய்வில் சங்ககால மக்கள் பயன்படுத்திய பானை ஓடுகள், மணிகள், வட்டசில், தங்க ஆபரணம், போன்ற ஏராளமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் வட்ட வடிவில் சுடு செங்கல் கட்டுமானம் நீர்வழித்தடம் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் அடுத்தகட்ட அகழாய்விற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்த நிலையில் (18/06/2024) செவ்வாய்கிழமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக அகழாய்வுப் பணிகளைத் தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்வில் பொற்பனைக்கோட்டை அகழாய்வுத்திடலில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வுக் குழுவினர் ஆகியோர்  கலந்து கொள்கின்றனர்.

இந்த அகழாய்வில் சங்ககால மக்கள் வாழ்ந்த வரலாறுகள் சான்றுகளாக வெளிப்படலாம் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் உள்ளது.

Next Story

லண்டன் சென்று வந்த மாணவர்களுடன் முதல்வர் கலந்துரையாடல்

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
chief minister discussion with students who visited London

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் லண்டனுக்குச் சென்று பயிற்சி பெற்றுத் திரும்பிய மாணவர்கள் இன்று தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

பள்ளிக் கல்வி முடித்த மாணவ மாணவிகள் உயர்கல்வி படிப்பைத் தொடர்வதற்கான 'நான் முதல்வன்' திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு நான்  முதல்வன் திட்டம் மூலம் பயிற்சி பெற்ற மாணவ மாணவிகள் 25 பேர் கடந்த வாரம் திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக லண்டன் சென்றிருந்தனர். இரண்டு வார பயிற்சிக்குப் பின் சென்னை திரும்பி நிலையில் இன்று பிற்பகல் ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் மாணவ  மாணவியர்களுடன் முதல்வர் கலந்துரையாடினார்.