
பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா என்பவர் ஒரு தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திப் பேசினார். இன்னொரு நிர்வாகியான நவீன் ஜிண்டால் என்பவர் சமூகவலைதளத்தில் நபி பெருமானை இழிவுபடுத்திப் பதிவு செய்தார். இதனால் அரபு நாடுகள் முழுவதும் மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்துள்ளது. சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் இந்திய பொருட்களைப் புறக்கணிப்போம் என்ற முழக்கம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்நிலையில் திமுக சிறுபான்மையினர் நலவுரிமைப் பிரிவுச் செயலாளர் டாக்டர் மஸ்தான், பாஜக நூபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் இருவரையும் கைது செய்ய வேண்டும் என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்ணல் நபிகள் பெருமான் குறித்து அவதூறு கருத்தைத் தெரிவித்த தெரிவித்த பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர்கள் இருவரும் கைது செய்யப்பட வேண்டும். பொறுப்பற்ற வகையில் செய்யப்படும் இதுபோன்ற வெறுப்பு விமர்சனங்கள் சமூகத்தில் அமைதியை மட்டுமல்ல, எதிர்காலத்துக்கே கேடு விளைவிப்பவை.
அவர்கள் இருவர் மீதும் கட்சி ரீதியான நடவடிக்கை மட்டும் எடுத்து பா.ஜ.க. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயலக்கூடாது. சட்டரீதியான நடவடிக்கை அவசியம் என்பதை தி.மு.க. சிறுபான்மையினர் நலவுரிமைப் பிரிவு வலியுறுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.