சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்து தற்போது உலகம் முழுவதும் சுமார் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கரோனாவால் 2.76 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதனால் பலியானோர் எண்ணிக்கை 11,000 ஐ கடந்துள்ளது. சீனாவில் 80,967 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டனர். மேலும் இந்த வைரஸ் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மக்கள் அனைவரும் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகரும், அரசியல்வாதியுமான மன்சூர் அலிகான் பேசும் போது, கரோனா நோயிலிருந்து தப்பிக்க வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். தினக்கூலி தொழிலாளர்கள் இதனால் வேலையின்றி கஷ்டப்பட்டு வருகின்றனர். தொட்டாலே தீட்டு என்பதை நியாயப்படுத்தும் வகையில் பீதியை கிளப்பி வருகின்றனர். தொடர்ந்து பேசிய அவர், அப்படியென்றால் கரோனா நோயாளிகள் தொட்ட நோட்டுகளை எரிப்பார்களா? என்ற கேள்வியை எழுப்பினார். மேலும் நமது பண்பாடு ஆரத்தழுவி வணங்குவது தான். ஆனால் நமது பண்பாட்டிற்கு எதிராக தீண்டாமையை மக்கள் மத்தியில் அரசு புகுத்தி வருவதாகவும் கூறினார்.
அதோடு, வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் மூலம் தான் கரோனா பரவுகிறது என்றால் வெளி நாட்டினர் இந்தியா வருவதைத் தடுக்காமல் உள்ளூரில் இருப்பவர்களுக்குக் கட்டுப்பாடு விதிப்பது என்ன நியாயம் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் கரோனாவில் இருந்து தப்பிக்க வீட்டுக்கு வீடு மதுபானத்தை அரசே வழங்கலாம் என்றும் பேசினார். வீட்டிற்கு வீடு மதுபானம் கொடுங்கள் என்று பேசியது பரபரப்பை எற்படுத்தி வருகிறது.